தஞ்சாவூர்: திருவையாறு தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் என் மண், என் மக்கள் நடைபயணத்தை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, நடுக்காவேரி குடமுருட்டி ஆறு படித்துறையில் தொடங்கினார்.
அப்பகுதியில் நடுக்காவேரி, பூதலூர், திருக்காட்டுப்பள்ளி என சுமார் 12.5 கிலோ மீட்டர் தூரம் வரை நடைபயணம் மேற்கொண்டார். அப்போது கருப்பூர் என்ற ஊரில் உள்ள வயலில் இறங்கி நாற்று நடவு செய்து கொண்டிருந்த கூலி தொழிலாளர்களிடம் சென்று அவரும் நெல் நாற்று நடவு செய்து கலந்துரையாடினார்.
முன்னதாக செய்தியாளர்களிடம் அண்ணாமலை கூறும்போது, "தமிழகத்தில் என் மண், என் மக்கள் யாத்திரையில் 112வது தொகுதியாக திருவையாறு டெல்டா பகுதிக்கு வந்துள்ளோம். காவிரி ஆறு எப்போதும் வற்றக் கூடாது. டெல்டா பகுதி எல்லா விவசாயிகளுக்கும் நிரந்தரமாக காவிரி நீர் 365 நாட்களும் கிடைக்க வேண்டும் என்று ஆண்டவனிடம் வேண்டுதல் வைத்து பூஜை செய்து இங்கிருந்து யாத்திரையை தொடங்கியுள்ளோம்.
டெல்டா பகுதிக்கு வந்தது மகிழ்ச்சியாகும். பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து டெல்டா பகுதி விவசாயிகளுக்கு எப்படி துணை நிற்கிறார் என்பதை மக்களிடம் தெரிவிப்போம். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் நவம்பர் வரை கிட்டத்தட்ட 8.25 லட்சம் டன் நெல், மத்திய அரசின் எப்சிஐ, தமிழ்நாடு அரசின் நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலமாக வாங்கியுள்ளது.
ஆனால், இந்தாண்டு செப்டம்பர் முதல் நவம்பர் வரை 5.25 லட்சம் டன் நெல் வாங்கப்பட்டுள்ளது. அதாவது இந்தாண்டு 3 லட்சம் டன் நெல் குறைவாக உள்ளது. காரணம் காவிரியில் தண்ணீர் வராத காரணத்தினால் டெல்டா மாவட்டங்களில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 3 லட்சம் டன் நெல் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
காவிரியில் தண்ணீர் வரவில்லை என்றால் என்ன ஆகும் என்பதற்கு இந்த குறியீடு சாட்சியாகும். இந்த பகுதியில் மீத்தேன், ஹைட்ரோகார்பன் வரக்கூடாது என்பதில் பாஜக உறுதியாக இருக்கிறோம். அனைத்து வகையிலும் மத்திய அரசு விவசாய பெருமக்களுக்கு துணை நிற்கும். ஆனால் மாநில அரசு டெல்டா மக்களை, விவசாயிகளை வஞ்சிக்கிறது.
காவிரியில் தண்ணீர் பெற்று தர முடியாத அரசாக மாநில அரசு இருக்கிறது. கடந்த 70 ஆண்டுகளில் நிறைய விஷயங்களை அரசியல் காரணங்களுக்காக நாம் விட்டுக் கொடுத்திருக்கிறோம்" எனத் தெரிவித்தார். இந்த யாத்திரை பயணத்தில் மாநில பொதுச் செயலாளர் கருப்பு முருகானந்தம், மாவட்ட தலைவர் ஜெய்சதிஷ் உட்பட பாஜகவினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.