தஞ்சாவூர்: முகக்கவசம் அணியாமல் வாகனத்தை நிறுத்தாமல் சென்றவரை சிறிது தூரம் ஓடிசென்று காவலர் ஒருவர் பிடித்துள்ளார்.
கும்பகோணம் அருகே நாச்சியார்கோவில் காவல்துறையினர், தெற்கு வீதியில் வாகன சோதனை ஈடுபட்டுள்ளனர். அப்போது அந்த வழியாக நாச்சியார்கோவில் பொண்ணியம்மண் கோவில் தெருவைச் சேர்ந்த பிரபு என்பவர், தனது மோட்டார் சைக்கிளில் ரேசன் கடைக்கு பொருட்கள் வாங்குவதற்காக சென்றுள்ளார்.
அவரை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவலர்கள் தடுத்துள்ளனர். ஆனால் அவர் வாகனத்தை நிறுத்தாமல் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் அவரை காவலர் கலைச்செல்வன் சிறிது தூரம் ஓடிசென்று பிடித்துள்ளார். மேலும் பிரபுவை அவர் தாக்கியுள்ளார்.
இதனால் இருவரும் ஒருவருக்கொருவர் தங்களை சரமாரியாக தாக்கி கொண்டுள்ளனர். இதனை பார்த்த அங்கிருந்த ஆயுதப்படை காவலர்கள் பிரபுவை சுற்றிவளைத்து சரமாரியாக தாக்கியுள்ளனர். பின்னர் அவரை கைது செய்து நாச்சியார்கோவில் காவல்நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
இதனைத்தொடர்ந்து பிரபு மீது காவல்துறையினர், பணி செய்ய விடாமல் தடுத்தல், பொது இடத்தில் தரக்குறைவாக பேசுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். கைது செய்யப்பட்ட பிரபு நாச்சியார் கோவில் அமமுக பொருளாளராக இருந்து வருகிறார்.
இதையும் படிங்க: +2 மாணவர்களுக்கு குட் நியூஸ் கொடுத்த ரங்கசாமி