தஞ்சாவூர் : தமிழ்நாட்டில் முதன்முறையாக விவசாயத்துக்கு தனி நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படவுள்ளதால், அது தொடர்பாக விவசாயிகளிடம் கருத்து கேட்புக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இக்கூட்டத்துக்குத் தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே.பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், " வரும் நிதிநிலை அறிக்கையில் விவசாயிகளின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுகிற வகையில், புதிய திட்டங்கள் இருக்கும். இயற்கை விவசாயம் செய்வதற்கான திட்டம் உருவாக்கப்படும். கரும்பு விவசாயிகளுக்கு உள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காணப்படும்.
நெல்லில் ஈரப்பதத்தைக் குறைக்கும் வகையில், நெல் உலர்த்தும் இயந்திரங்களை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதற்கான பணி நடைபெற்று வருகிறது. இதேபோல மழையில் நெல் நனையாமல் இருப்பதற்கு தார் பாய்கள் வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.
இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு அரசின் தலைமை கொறடா கோவி. செழியன், சட்டப்பேரவை உறுப்பினர்கள், வேளாண் உற்பத்தி ஆணையர், அரசு செயலாளர் சி.சமயமூர்த்தி, வேளாண்மைத் துறை இயக்குநர் ஆ.அண்ணாதுரை, வேளாண் விற்பனை, வணிகத் துறை ஆணையர் எம்.வள்ளலார் மற்றும் தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் உள்ள விவசாயப் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.
இதையும் படிங்க: நீதியின் குரலே தேசியக் குரலாக ஒலிக்க வேண்டும் - காவரி விவகாரத்தில் கமல் கருத்து