தஞ்சாவூர்: கும்பகோணத்தில் இன்று மாலை (அக்.10) நடைபெறும் தனியார் தொலைக்காட்சி, பட்டிமன்ற நிகழ்ச்சி படப்பதிவிற்காக வருகை தந்த நடிகையும், சமூக ஆர்வலருமான கஸ்தூரி, பாபுராஜபுரம் பகுதியில் அமைந்துள்ள இண்டிகோ தனியார் சொகுசு விடுதியில் இன்று நண்பகல் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “தமிழகத்திற்கு உரிமையான காவிரி நீரை கர்நாடகாவில் இருந்து பெற தமிழக அரசு எதுவுமே செய்யவில்லை. தமிழகத்திற்கான தண்ணீரை தராவிட்டால், காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியில் இருந்து வெளியேறுவோம் என அறிவித்திருந்தால், இந்நேரம் காவிரி நீர் நமக்கு கிடைத்திருக்கும்” என்று பகிரங்கமாக குற்றஞ்சாட்டினார்.
மேலும் காவிரி நீருக்காக, தமிழக மக்கள் பாதிக்கப்படும் வகையில் இங்கு பந்த் நடத்துவதை விட்டு விட்டு, கர்நாடக அரசு பொருளாதார ரீதியில் அத்தியாவசிய பொருட்களை பெருவதில் பாதிக்கும் வகையிலான போராட்டமாக மாற்றி அமைத்திருந்தால், நமக்கு தண்ணீர் கிடைக்கும் வாய்ப்பு கிடைக்கும். கர்நாடக அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல்வாதிகள் ஓட்டு அறுவடைக்காக, தங்கள் சுயலாபத்திற்காக, கேவலமான அரசியல் சூழலை உருவாக்கி வருகின்றனர்.
இதற்கு எனது மிகப்பெரிய கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். காவிரி நீருக்காக, தமிழக திரைப்படத்துறையினர் போராட்டத்தில் ஈடுபடாததற்கு வெட்கப்படுகிறேன். இதற்கு காரணம், திரைப்பட விநியோகம் மற்றும் வியாபார நிமித்தமாக பலர் அஞ்சி குரல் கொடுக்காமல் அமைதி காக்கிறார்கள்.
குறிப்பாக பலவற்றுக்கு குரல் கொடுக்கும் சத்யராஜ் போன்ற நடிகர்கள் காவிரி விசயத்தில், அவர்களுடைய சித்தாந்த ஆட்சி தமிழகத்தில் நடைபெறும் நிலையில், அவர் கூட அமைதியாக இருப்பது வியப்பாக உள்ளது. மணிப்பூர் கலவரத்திற்கு எதிராக போராடியவர்கள், இன்று தமிழக மக்கள் மற்றும் தமிழக விவசாயிகள் பாதிக்கும் காவிரி நீருக்காக முக்கியத்துவம் அளித்து போராட முன்வராதது ஏன்?
நடிகர் சித்தார்த் எனது நண்பராக இருந்த போதும், அவரது வீரத்தை சரியான இடத்தில் காட்டாமல், அவர் அமைதி காத்தது எனக்கு வியப்பை ஏற்படுத்தியது. அந்த இடத்தில் அவர் தமிழர்களுக்காக, தமிழ்நாட்டிற்காக குரல் கொடுத்திருந்தால், அவரின் உணர்விற்கு உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் அவரை இன்று அவரே எதிர்பார்க்காத வகையில் கொண்டாடியிருப்பார்கள்.
காவிரி பிரச்னையில், மக்கள் பிரதிநிதியாகவுள்ள ஆளும் கட்சி கொடுக்கும் குரலுக்கும், எதிர்கட்சிகள் ஒலிக்கும் குரலுக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. ஆளும் கட்சி குரல் கொடுக்கும் போது அது வலிமையானதாக அமையும். அதனை இங்கு திமுக செய்ய தவறி விட்டது. எந்த நதிக்கும் அதன் கடைமடை பகுதிக்கு தான் உரிமை அதிகம். அந்த வகையில், காவிரியில் 75 சதவீதம் உரிமையுள்ள நாம், இன்று 172 டிஎம்சி நீர் பெறுவதற்கே போராட்ட வேண்டிய நிலை என்பது பரிதாபகரமானது.
தமிழ் சினிமா தற்போது மத, சாதி ரீதியான பிளவு விஷமாக ஊடுறுவி வருகிறது. இது சினிமாவிற்கு புதிதாக இருக்கிறது. பலர் பழைய கதையை கிளறி விட்டு, மறுபடியும் வன்மத்தை தூண்டி மிகப்பெரிய தவறுகளுக்கு வித்திடுகிறார்கள்” என்று பகிரங்கமாக குற்றம்சாட்டிய கஸ்தூரி, தமிழ் சினிமாவில் கெட்ட வார்த்தைகள், கொச்சை வார்த்தைகள் பேசுவது இது முதல்முறை என்ற போதும், மங்காத்தாவில் கூட அஜித் இப்படி பேசியிருப்பார் என்றார்.
சின்னஞ்சிறு குழந்தைகள், இளவட்டங்கள் ஆகியோரை பெரும் பகுதி ரசிகர்களாக கொண்டுள்ள விஜய் போன்ற உச்ச நட்சத்திரங்கள் அத்தகைய வார்த்தைகளை பயன்படுத்துவதற்கும் வித்தியாசம் உள்ளது எனக் கூறினார்.
மேலும், “இந்த வார்த்தைகள் சினிமாவில் இடம் பெறாது என்ற போதும், இதனை அவரது ரசிகர்கள் சாதாரணமாக பயன்படுத்த துவங்கினால் என்ன ஆகும்.
விஜய்யின் லியோ படத்திற்கு இப்படிப்பட்ட கெட்ட கொச்சை வார்த்தைகள் பேசி தான் விளம்பரம் தேட வேண்டிய அவசியம் இல்லாத போது, அந்த காட்சிக்கு அவசியம் என கருதி அந்த வார்த்தைகளை இயக்குனர் அங்கு பயன்படுத்தியிருந்தாலும், அதனை நான் இயக்குனர் லோகேஷ் கனராஜின் தோல்வியாகவே பார்க்கிறேன்” என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: பயிர் காப்பீடு தொகை வழங்க வேண்டும்.. குடிக்காடு கிராம விவசாயிகள் மாவட்ட ஆட்சியரிடம் மனு!