தஞ்சாவூர்: கும்பகோணம் மாநகரில் கரோனா பேரிடர் காலம் தொட்டு, கடந்த 3 ஆண்டுகளாகச் சாலையோர ஏழை எளிய மக்களைத் தேடிச் சென்று அவர்களுக்கு நாள்தோறும் காலை மதியம் என இரு வேளை உணவு வழங்கும் திட்டத்தை அபிமுகன் தர்மசாலை அமைப்பு தொடங்கியது.
அதனை தற்போதும் தொடர்ந்து வரும் நிலையில் 15க்கும் மேற்பட்ட நல்லுள்ளங்களின் பிரதிபலன் பாரா தினசரி தொண்டுடன், நல்ல முறையில் செயல்படுத்தி வருகிறது. உலகெங்கும் உள்ள இந்தியர்களால், தீபாவளி பண்டிகை நாளை (அக்.24) உற்சாகமாகக் கொண்டாடப்படவுள்ளது.
இந்த வேளையில், சாலையோரம் வசிக்கும் மக்கள், ஆதரவற்றோர் போன்றவர்களும், மனிதாபிமான அடிப்படையில், நம்முடைய சக மனிதர்களாக இப்பண்டிகையினை அவர்களும் நம்மைப் போல மகிழ்ச்சியுடனும் இந்த தீபாவளியைக் கொண்டாட வேண்டும் என இந்த அமைப்பு எண்ணியது.
இந்த உயரிய நோக்கில், வயதானோர், பார்வையற்றோர், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்றோர் என 600க்கும் மேற்பட்டோருக்கு வேட்டி, சேலை இனிப்பு மற்றும் காரம் பலகாரங்களை, அமைப்பின் நிர்வாகிகள் மகாலிங்கம் மற்றும் இளமதி ஆகியோர் முன்னிலையில், ஓய்வு பெற்ற திருக்கோயில் செயல் அலுவலர் பன்னீர்செல்வம் வழங்கினார். இந்நிகழ்வில் அபிமுகன் தர்மசாலை அமைப்பின் நிர்வாகிகள் பலரும் உடனிருந்தனர்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டு மக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி தீபாவளி வாழ்த்து