தஞ்சாவூர்: தஞ்சையில் பசுமை மற்றும் வனப் பரப்பை அதிகரிப்பதற்காக தன்னார்வ அமைப்புகள், அரசு அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் ஒத்துழைப்புடன் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறார்.
அதில் தஞ்சையை அடுத்த திருமலைசமுத்திரத்தில் அமைந்து வரும் விருட்ச வனம், மாவட்டம் முழுமையும் செயல்படுத்தப்பட்டு வரும் வீட்டுக்கு ஒரு விருட்சம், ஏரி குளங்களில் பறவைகள் வனம், ஆற்றுப்படுகையில் இயற்கை வனம், கடற்கரைப் பகுதிகளில் ஆழி வனம், பேரூராட்சிகளில் வளம் மீட்பு வனம், கிராமப்புறங்களில் ஊருக்கு ஒரு வனம் என தொடர்ச்சியானப் பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி சிறப்பான பணிகள் நடைபெற்று வருகின்றன.
அதன் தொடர்ச்சியாக தஞ்சாவூர் சிட்கோ வளாகத்தில் கவின்மிகு தஞ்சை சார்பில் சமுதாய நாற்றங்கால் தோட்டம் மூலம் மரக்கன்றுகள் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள விருந்தினர் மாளிகையில் மா, பலா, வாழை உள்ளிட்ட முக்கனி தோட்டம் அமைக்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் சாலை விரிவாக்கத்தின் போது, அகற்றப்படும் ஒரு மரத்திற்கு கூடுதலாக 10 முதல் 20 மரக்கன்றுகள் நட்டு பராமரிக்கப்படுவது மாவட்ட பசுமை கமிட்டி மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையம் சாலை நெடுஞ்சாலைத் துறையால் விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. இதனையடுத்து இந்தச் சாலையில் விரிவாக்கத்தினால் பாதிக்கப்பட்ட 50 ஆண்டுகள் பழமையான ஆலமரம் நெடுஞ்சாலைத்துறை மூலம் பெயர்த்து எடுத்து தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தற்போது நடப்பட்டுள்ளது, இந்த 50 ஆண்டுகள் கால ஆலமரத்திற்கு மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தண்ணீர் ஊற்றி மரத்திற்கு உயிரோட்டம் அளித்தார்.
இந்நிகழ்ச்சியில் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் செந்தில்குமார் உதவி கோட்ட பொறியாளர் கீதா, உதவி பொறியாளர் மோகனா, இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி துணை சேர்மன் பொறியாளர் முத்துக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதேபோல் தஞ்சை விவேகானந்தர் நகரைச் சேர்ந்த ஸ்ரீதர் என்பவரின் மகன் தயா. இவர் ஏழாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவன்.
தனது வீட்டின் மாடித்தோட்டில் முளைத்த ஒரு வருடத்திற்கு முந்தைய ஆல மரக்கன்றினை கொண்டு வந்து மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம் ஒப்படைத்தார். பின்னர் அந்த மரக்கன்றும் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடப்பட்டது.
தற்போது தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு திங்கள்தோறும் நடைபெறும் மக்கள் குறை தீர்ப்புக் கூட்டத்திற்கு ஏராளமான பொதுமக்கள் வருகை தந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துவிட்டு இந்த மரத்தின் நிழலில் இளைப்பாறுவார்கள் என்பதற்காக இம்மரம் வைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வளாகம் முழுவதும் மரக்கன்றுகளால் நிரம்பி வனப்பரப்பு அதிகரித்து நிழலாக காட்சியளித்து வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: எல்லைக்கட்டு திருவிழா: நள்ளிரவில் தீப்பந்தங்களுடன் ஊரைச் சுற்றி வலம் வந்த இளைஞர்கள்!