தஞ்சாவூர்: சினிமா உள்ளிட்ட கலைத்துறைகளில் இசை இன்றியமையாதது. அந்த இசையை ஏற்படுத்த கிட்டார், வயலின் உள்ளிட்ட எத்தனையோ பல எண்ணற்ற இசை கருவிகள் மிகவும் உறுதுணையாக உள்ளன. இந்நிலையில், இத்தகைய கருவிகளால் அமைக்கப்பட்ட பின்னணி இசையே நாடகங்கள் ஆகட்டும், இல்லை தற்போது வளர்ச்சியடைந்த சினிமாத்துறை ஆகட்டும் அவற்றின் வெற்றிக்கு மிகவும் முக்கிய காரணமாக உள்ளது.
அந்தவகையில், இன்னும் சொல்லப்போனால் பின்னணி இசைகளே ரசிகர்களை காட்சிகளை விட்டு நீங்கவிடாமல் பிணைத்து வைக்கும் பாலமாக உள்ளன என்றால் அது மிகையாகாது. இதற்காக இசையமைப்பாளர்களும், இசைக்கலைஞர்களும் எடுக்கும் மெனக்கெடல்கள் அதிகமானவை.இந்த நிலையில் கஞ்சிரா, முகர்சிங், சாக்ஸபோன், தவில், மிருதங்கம், வயலின் உள்ளிட்ட இத்தகைய கருவிகள் இல்லாமல் தனது குரல் வளத்தால் மிகவும் த்ரூபமாக இசை எழுப்பி வருகிறார், தஞ்சாவூரைச் சேர்ந்த மு.பாலமுருகன்(56).
தஞ்சாவூர் மாநகராட்சி எல்லையம்மன் கோயில் தெரு, கிருஷ்ணராயர் சந்து பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன். பாரம்பரிய இசை குடும்பத்தை சார்ந்த இவர், 1991ஆம் ஆண்டு திருவையாறு அரசு இசை கல்லூரியில் மிருதங்கத்தில் டிப்ளமோவில் பெற்றுள்ளார். இதனைத்தொடர்ந்து, இவர் மேடை நிகழ்ச்சிகள் மற்றும் இசைக் கச்சேரிகளை ரசித்து பார்த்தபோது தானும் அதுபோல் செய்ய வேண்டும் என்று எண்ணியுள்ளார். இதனையடுத்து, தனது குரல் வளத்தால் இசைக் கருவிகளைப் போல் வாசித்து பயிற்சி பெற்றுள்ளார். அந்த முயற்சியின் ஒருபகுதியாகவே, மங்கல வாத்தியங்களை தனது குரல் வளத்தாலே வாசித்து கேட்கும் பலரையும் இவர் பிரம்மிக்க வைத்துள்ளார்.
அதன் பின்னர், பிரபல தவில் வித்வான் அரித்துவாரமங்கலம் ஏ.கே.பழனிவேல், இவரது திறமையை பார்த்து குரல் இசை வாத்திய நிகழ்ச்சியில் பாலமுருகனைப் பாடுவதற்கு வாய்ப்பை ஏற்படுத்தியதோடு, இவரது அசாத்தியமான திறமையை வெளியுலகிற்கும் கொண்டுவந்து வெளிச்சமிட்டு காட்டி உள்ளார்.
கடந்த 30 ஆண்டுகளாக தனது குரல் இசையால் லயவாத்திய இசையை தனித்திறமையால் மேடை நிகழ்ச்சிகள் மற்றும் கோயில் விழாக்களில் பாடி அசத்தி வருகிறார். இவரது திறமையை பாராட்டும் வகையில் பல்வேறு அமைப்புகள் மற்றும் மத்திய, மாநில அரசின் விழாக்களில் பாராட்டு சான்றிதழ்களும் விருதுகளும் பெற்றுள்ளார்.
இத்தகைய சாதனைகலை படைத்து வரும் பாலமுருகன் தனது குரல் இசையால் லய வாத்தியங்களான தவில், மிருதங்கம், கஞ்சிரா, முகர்சிங், வயலின், சாக்ஸபோன், கொன்னக்கோல், வீணை போன்ற இசைக்கருவிகளின் இசையைப் போன்று இசைக்கருவிகள் இல்லாமல் தனது குரல் மூலம் அவற்றை த்ரூபமாக மிகவும் அழகாக எழுப்பி அசத்தி வருகிறார். மேலும், பக்தி பாடல்கள் திரையிசைப் பாடல்களையும் பாடும் திறமையையும் இவர் பெற்றுள்ளார்.
அத்தோடு, இது மட்டுமல்லாமல் மிருதங்கம், கடம், கொன்னகோல் ஆகிய இசைக்கருவிகளையும் வாசிக்கும் திறமையும் பெற்றுள்ளார். இசைக்கருவிகள் இல்லாமல் தனது குரல் இசை மூலம் பாடிவரும் பாலமுருகனை பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.
இந்நிலையில், தமிழ்நாடு அரசின் கலை பண்பாட்டுத் துறையின் சார்பில் தஞ்சாவூர் மாவட்ட கலைமன்றம் இவருக்கு சிறந்த பலகுரல் இசைக் கலைஞர் என்ற சிறப்புக்குரிய விருதை வழங்கி கௌரவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தனது குரல் வளத்தால் இசையை வாசிக்கும் பாலமுருகனுக்கு மத்திய மாநில அரசுகள் உயரிய விருது வழங்கி சிறப்பிக்க வேண்டுமென இசைக் கலைஞர்கள் எதிர்பார்க்கின்றனர். தனது அசாத்தியமான குரல் வளத்தைக் கொண்டு பல சாதனைகளை செய்துவரும் பாலமுருகனுக்கு சிறந்த அங்கீகாரமும் உரிய வெகுமதியும் கிடைப்பதற்காக, பாராட்டுவதில் நமது ஈடிபாரத் தமிழ்நாடு மிகுந்த மகிழ்ச்சியடைகிறது.
இதையும் படிங்க: தனியார் பள்ளிகளுக்கு சவால்! டங் ட்விஸ்டர் முறையில் ஆங்கிலத்தில் அசத்தும் அரசு பள்ளி மாணவர்கள்!