தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அடுத்த கோட்டாகுடி கிராமத்தில் நரிக்குறவ சமூகத்தைச் சேர்ந்த தியாகராஜன், பெரியாச்சி தம்பதியினருக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில், பெரியாச்சி மீண்டும் கர்ப்பமாக இருந்துள்ளார்.
நிறைமாத கர்ப்பிணியான பெரியாச்சி நேற்று பிரசவ வலியால் துடித்துள்ளார். அப்போது அவ்வழியாக வந்த தனியார் பேருந்து ஓட்டுநர் மனிதாபிமான அடிப்படையில் பெரியாச்சியை பேருந்தில் அழைத்துக்கொண்டு பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனைக்குச் சென்றார்.
ஆனால் மருத்துவமனைக்குச் செல்லும் வழியில் பெரியாச்சிக்கு பேருந்திலேயே இரட்டை ஆண் குழந்தை பிறந்தது. இதனைத் தொடர்ந்து பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் தாயும் சேயும் சேர்க்கப்பட்டு தற்பொழுது தாயும், இரண்டு ஆண் குழந்தைகளும் நலமாக உள்ளனர்.
ஓடும் பேருந்தில் நிறைமாத கர்ப்பிணி ஒருவருக்கு குழந்தை பிறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.