தஞ்சாவூர் மாவட்டம் நடுக்காவேரி அரசு மருத்துவமனை எதிரில் வசித்து வருபவர்கள் ரமேஷ்-மீனாட்சி தம்பதி. அவர்களுக்கு ஒரு மகள், இரு மகன்கள் என மூன்று பிள்ளைகள் உள்ளனர். 11 ஆண்டுகளாக குடிசை வீட்டில் வசித்து வரும் ரமேஷ் தனது குடிசையின் முன்பாக சைக்கிள் பழுது பார்க்கும் வேலை செய்து வருகிறார்.
பஞ்சர் ஒட்டி தனது மூன்று பிள்ளைகளையும் படிக்க வைத்து வருகிறார் ரமேஷ். அவரது குடிசையில் 11 ஆண்டுகளாக மின்சார வசதியில்லை. அதன் காரணமாக ரமேஷ் தனக்காக இல்லாவிட்டாலும் தனது பிள்ளைகள் பள்ளியிலிருந்து வந்து மாலையில் படிக்க வேண்டும் என்பதற்காக நடுக்காவேரி மின்சார வாரியத்தில் பலமுறை ஆவணங்களையும், மனுக்களையும் அளித்து மின்சார வசதி கேட்டுள்ளார். ஆனால் விளக்கு எரிய மின்சார வாரியம் முன்வரவில்லை.
இன்றளவும் அவரின் பிள்ளைகள் விளக்கு வெளிச்சத்தில்தான் படித்துவருகின்றனர். அதுவும் மழைக்காலம் வந்தால் கெட்டது. ஏனென்றால் மழைக்காலத்தில் அவர்களின் வீடு ஒழுக ஆரம்பித்துவிடும். நோட்டுப் புத்தகங்களை மழையிலிருந்து பாதுகாக்க வேண்டிய குழந்தைகளால் எப்படி படிக்க முடியும்.
இது குறித்து ரமேஷின் மகன் தினேஷ் கூறுகையில், "நான் பிறந்ததிலிருந்து எங்களது வீட்டில் மின்சாரமில்லை. மண்ணெண்ணெய் விளக்கில்தான் படித்து நானும் என் தம்பி, தங்கையும் படித்து வருகிறோம். நன்றாக படிக்கும் எனக்கு மின்சார விளக்கில் படிக்கும் வாய்ப்பு கிடைத்தால் இன்னும் நன்றாக படிப்பேன். ஆனால் மின்சாரம் வேண்டுமே" எனத் தெரிவித்தார்.
இது குறித்து ரமேஷ் கூறுகையில், "மின்சாரம் இல்லாமலும் மழைக்காலங்களில் ஒழுகும் வீட்டினாலும் வாழ்க்கை போராட்டமாக இருந்துவருகிறது. இரவு நேரங்களில் மழை அதிகமாகப் பெய்தால், எதிரே உள்ள அரசு மருத்துவமனையில் சென்று பிள்ளைகளுடன் உறங்கிக் கொள்கிறேன். அதுவும் அவசர சிகிச்சை பிரிவுக்கு நோயாளிகள் வந்துவிட்டால் தீர்ந்தது. அங்கும் எனக்கு இடமில்லை. அன்று இரவு தூக்கம் திண்டாட்டம்தான். எனவே மாவட்ட நிர்வாகம் ஒரு மின்விளக்கு வசதி செய்து கொடுத்தால் போதும்" என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
இதையும் படிங்க: 12 நாள்கள் இருளில் மூழ்கிய கிராமத்திற்கு ஒளி பாய்ச்சிய ஈடிவி பாரத்!