தஞ்சாவூர் மாவட்டத்தில் காவிரி ஆறு பாய்ந்தாலும் இம்மாவட்டத்தின் தெற்கு பகுதியான ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, அறந்தாங்கி ஆகியவை 19ஆம் நூற்றாண்டு தொடக்கம் வரை புஞ்சை நிலப்பகுதியாகவும், வானம் பார்த்த பூமியாகவும் இருந்து வந்துள்ளது. ஏரி பாசனப் பகுதியாக இருந்த இப்பகுதிகளில், பள்ளத்தை நோக்கி ஓடும் ஆறுகளும் இயற்கையாக உருவாகவில்லை.
ஆங்கிலேயர்களின் ஆட்சிக்காலத்தில் 1925ஆம் ஆண்டில் மேட்டூர் அணை சிறப்புத் திட்டம் கொண்டு வரப்பட்டது. அப்போது, தஞ்சை மாவட்டத்தின் தென்பகுதி பயனடையும் வகையில், பிரிட்டிஷ் அரசின் ராணுவப் பொறியாளர் கர்னல் டபிள்யூ எம். எல்லீஸ், இங்கிலாந்தின் தேம்ஸ் நதியை உதாரணமாகக் கொண்டு தஞ்சை நகரின் மத்தியில் கல்லணைக் கால்வாய் செல்லுமாறு வடிவமைத்தார்.
1934ஆம் ஆண்டில் ஆகஸ்ட் 28ஆம் தேதி திறக்கப்பட்ட இக்கால்வாய் கல்லணைத் தலைப்பில் தொடங்கி, புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள தொண்டி அருகே உள்ள மும்பாலை கிராமம்வரை 149 கி.மீ நீளம் பாய்ந்து செல்கிறது. இதில், 109 கி.மீ ஆங்கிலேயரின் ஆட்சிக்காலத்திலும் மீதமுள்ள நீளம் சுதந்திர இந்திய அரசாலும் வெட்டப்பட்டது.
தஞ்சை பகதியில் இருந்த 3 லட்சம் ஏக்கர் புஞ்சை நிலங்கள் நஞ்சை நிலங்களாக மாற்றப்பட்டு கல்லணைக் கால்வாய் மூலம் பெறப்படும் நீரைக் கொண்டு நெல் விளையும் பூமியாக மாறியுள்ளது. இக்கால்வாயிலிருந்து 327 ஏ,பி, சி, டி என நான்கு கிளை வாய்க்கால்கள் நீரைப் பிரித்தெடுத்துச் செல்கின்றன. 1,300 கிமீ நீளமுள்ள இவ்வாய்க்கால்கள் மூலம் சுமார் 680 முதல் 700 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறுகின்றன.
தஞ்சை பெரியகோயில் கட்டடக் கலையின் உன்னதம் என்றால் கல்லணைக் கால்வாய் பாசனப் பொறியியலின் உன்னதம். மனிதர்களால் வெட்டப்பட்ட இக்கால்வாயில் கழிவுநீர் கலக்க முடியாத வகையில் சிறப்புடன் அமைக்கப்பட்டுள்ளது. தண்ணீரின் விசையை சீராக வைத்துக்கொள்ள 505 இடங்களில் டிராப் எனப்படும் நீர் ஒழுங்கிகளும் கட்டப்பட்டுள்ளன. வெள்ள காலங்களில் தண்ணீரை எளிதில் வெளியேற்றிடும் வகையில் இயற்கை இடர்பாடு மீட்பு தத்துவத்திற்கு உதாரணமாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
மேலும், கல்லணைக் கால்வாயிலிருந்து கிளை வாய்க்கால்களில் திறக்கப்படும் தண்ணீர், பாசனத்திற்கு போக மீதி தண்ணீர் கல்லணைக் கால்வாயில் வந்து சேரும்படியும் வடிவமைக்கப்பட்டுள்ளது கூடுதல் சிறப்பாகும். புதுமைகளைக் கொண்ட இந்தாறு முழுக்க பாசனத்திற்காக மட்டுமே வெட்டப்பட்டது. இயற்கையான ஆறுகள் பள்ளத்தை நோக்கியே ஓடும்.
ஆனால், கல்லணைக் கால்வாய் மேடான பகுதிக்குள்ளும் புகுந்து சென்று கடைமடைவரை தண்ணீர் செல்லும். இதனால் தான் தஞ்சை பெரியகோயில் அருகே 30 அடி ஆழத்திலும், ஒரத்தநாடு, திருவோணம் அருகே 30அடி உயரத்திலும் செல்லும். பக்கவாட்டிலும் தரையிலும் சிமெண்ட் சிலாப்புகள் அமைக்கப்பட்டுள்ளதால் தண்ணீரின் திசை வேகம் அதிகமாக இருக்கும்.
மேலே காண்பதற்கு நீரோட்டம் சலனமின்றி தெரிந்தாலும், கீழ் ஆழ நீரோட்டம், 2-3 மடங்கு அதிவேகமாக இருக்கும். தஞ்சை மாவட்டத்தின் தென்பகுதியில் இக்கல்லணைக் கால்வாய் பாய்ந்து புஞ்சை நிலங்களாக இருந்தவைகளை நஞ்சை நிலங்களாக மாறச்செய்து செழுமையடைய செய்ததால் இது விவசாயிகளின் கொடை என்றால் மிகையாகது. கல்லணைக் கால்வாய் விவசாயிகளின் வரப்பிரசாதமே.
இதையும் படிங்க: மீண்டும் தலைதூக்கும் முல்லைப்பெரியாறு விவகாரம்