தஞ்சாவூர்: திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பவனமங்கலம் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் கலியமூர்த்தி - அம்பிகா தம்பதி. இவர்களுக்கு 8 வயதுடைய மகள் மற்றும் 5 வயதுடைய மகன் ஆகிய இருவரும் திருக்காட்டுபள்ளியில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்தனர். இவர்களில் கவிபாலன் ஒன்றாம் வகுப்பு படித்து வந்தார். இவர்கள் இருவரும் தினமும் வீட்டிலிருந்து வேன் மூலம் பள்ளிக்குச் சென்று வருவது வழக்கம்.
அதன்படி, நேற்று (ஜீலை 25) காலை பள்ளிக்குச் சென்ற இருவரும் பள்ளி முடிந்தவுடன் மாலையில் வேனில் வீட்டுக்கு திரும்பி வந்துள்ளனர். அப்போது வீட்டின் அருகே வேன் வந்து நின்றதும், வேனில் இருந்து இறங்கிய சிறுவன் தனது வீட்டை நோக்கி நடந்து வந்துள்ளார். அப்போது திருவையாறு அருகே மரூரில் உள்ள மணல் குவாரியில் இருந்து மணல் ஏற்றி வந்த லாரி, சிறுவன் மீது கண்ணிமைக்கும் நேரத்தில் மோதியது.
இந்த விபத்தில் சிறுவன் மீது லாரி சக்கரம் ஏறி இறங்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்த அந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், ஆத்திரத்தில் சிறுவனின் உயிரிழப்பிற்கு காரணமான லாரியின் கண்ணாடிகளை அடித்து உடைத்தனர். இந்த சம்பவத்தால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த விபத்தால் திருக்காட்டுப்பள்ளி - திருவையாறு சாலையில் வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனிடையே, இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த பூதலூர் தாசில்தார் பெர்சியா, தஞ்சை கூடுதல் காவல் ஆய்வாளர் ஜெயச்சந்திரன், துணை காவல் ஆய்வாளர் ராமதாஸ், திருக்காட்டுப்பள்ளி காவல் துணை ஆய்வாளர் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போக்குவரத்தை சீரமைத்தனர்.
இதனைத் தொடர்ந்து சிறுவனின் உடல் பூதலூர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. இது குறித்து திருக்காட்டுப்பள்ளி காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காலையில் சீருடை அணிந்து உற்சாகமாக பள்ளிக்குச் சென்ற தங்களது மகன் மாலையில் வீடு திரும்பியபோது மணல் லாரியின் அடிபட்டு உயிரிழந்தது அறிந்து பதறி அடித்துக் கொண்டு சிறுவனின் பெற்றோர் மருத்துவமனைக்கு ஓடி வந்தனர்.
அங்கு வந்து பெற்றோர் தங்களது மகனின் உடலை பார்த்து கதறி அழுத காட்சி மருத்துவமனையில் இருந்தவர்களிடம் சோகத்தை உண்டாக்கியது. இந்த நிலையில் திருவையாறு, திருக்காட்டுப்பள்ளி சாலையில் மணல் லாரிகளுக்கு உரிய கட்டுப்பாடு விதிக்க வேண்டும் எனவும், பள்ளி நேரத்தில் மணல் லாரிகள் இயக்குவதை முற்றிலும் நிறுத்த வேண்டுமென அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதையும் படிங்க: சிறையில் இளைஞர் மரணமடைந்த வழக்கு - சிறை காவலர்களுக்கு ஜாமீன் வழங்க மறுப்பு!