தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்கான கடன் வழங்குவது குறித்த ஆய்வுக்கூட்டம் தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தலைமையில் நடைபெற்றது. இதில் கூட்டுறவுத் துறை, வேளாண் துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த அமைச்சர் ஐ. பெரியசாமி, "நியாயவிலைக் கடைகளில் தரமில்லாத அரிசி வழங்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
சிறு, குறு உழவர்கள் எனப் பாகுபாடின்றி அனைவரையும் உறுப்பினராக்கி பயிர்க்கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.
கூட்டுறவு சங்க நிர்வாகிகள் மீது முறைகேடு வந்தால் அதன் அடிப்படையில் நிர்வாகிகளை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாடு முழுவதும் கூட்டுறவு வங்கிகள் மூலம் பயிர்க்கடன் வழங்க 11 ஆயிரத்து 500 கோடி ரூபாய் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.