கும்பகோணம் அருகே உள்ள ஒப்பிலியப்பன் கோயிலில் அமைந்துள்ள வேங்கடாசலபதி சுவாமி திருக்கோயில் 108 வைணவ தலங்களில் ஒன்றாகவும், தமிழக திருப்பதி என்றும் போற்றப்படுகிறது. இத்தலத்தில் பெருமாள் ஒரே தாயாரான பூமிதேவியுடன் ஒரே சன்னிதியில் நின்ற திருக்கோலத்தில் அருள்பாலிக்கிறார். இவர் திருப்பதி பெருமாளுக்கு மூத்தவர் என்றும் போற்றப்படுகிறார்.
இத்தலம் திருமங்கையாழ்வார், பொய்கையாழ்வார், பேயாழ்வார் ஆகியோரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட பெருமைக்குரியதாகும், பெருமாளின் வாக்குக்கு ஏற்ப, இங்கு மூலவர் பெருமாளுக்கு அனைத்து நிவேதனங்களும், உப்பு இன்றியே செய்யப்படுகிறது என்பது சிறப்பு. இத்தகைய பெருமை கொண்டு இந்த வைணவ தலத்தில் மாசி மாத சிரவண நாளான திருவோண நட்சத்திர நன்னாளில் ஏக தின லட்சார்ச்சனை நடத்தப்படுவது வழக்கம்.
அதுபோல இவ்வாண்டும் இன்று மாசி மாத திருவோண நன்னாளில் ஏக தின லட்சார்ச்சனை காலை முதல் மாலை வரை உற்சவர் பொன்னபர் சமேத பூமிதேவி தாயாருக்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதற்கிடையே திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு, நண்பகல் முதல் திருக்கோயிலில் மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.
அதன்பின் பட்டாட்சாரியார் பக்தி பரவசமுடன், நாதஸ்வர மேள தாளம் முழங்க, சாம்பிராணி சட்டியுடன் சிரவண தீபம் ஏந்தி வர, தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் அவர்களிடம் மஞ்சள், குங்கும பிரசாதம் பெற்றனர். தொடர்ந்து அவர்கள் பிரகார வலமாக வர, அவர்களை பின்பற்றி திரளான பக்தர்கள் அவர்களை பின்தொடர்ந்து பிரகார உலாவாக வந்தனர் என்பது குறிப்பிடதக்கது.
இதையும் படிங்க: Maha shivratri: தஞ்சை பெரிய கோயிலில் விடிய விடிய நடைபெற்ற நாட்டியாஞ்சலி