தஞ்சாவூர் பெரியகோயிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாத சதைய நாள், மாமன்னன் ராஜராஜ சோழனின் சதயவிழாவாக அரசு சார்பில் இரண்டு நாள்கள் கொண்டாடப்படும்.
தற்போது கரோனா ஊரடங்கு காரணமாக சதைய விழா ஒரு நாள் மட்டும் நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து, இன்று (அக்.26) 1035ஆவது சதய விழாவை முன்னிட்டு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் கோவிந்த ராவ் ராஜராஜ சோழன் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்த விழாவிற்கு, பத்து வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கும், 60 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கும் அனுமதி கிடையாது. சதய விழாவின் முக்கிய நிகழ்வான திருமஞ்சன வீதி உலா, பெருவுடையாருக்கு 42 திவ்ய அபிஷேகங்கள் இன்று நடைபெறும். அத்துடன் ராஜராஜசோழன் சிலைக்கு அரசியல் கட்சி, முக்கிய பிரமுகர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்த வருகை தருவார்கள் என்பதால் கோயிலில் கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
முன்னதாக பல்வேறு அரசியல் அமைப்பினரும் தமிழில் பெருவுடையாருக்கு அர்ச்சனை செய்ய வேண்டும் எனக் கோரிக்கைகள் விடுத்துவந்த நிலையில், அவர்களின் கோரிக்கைகளுக்கு ஏற்ப தேவாரம், திருவாசகம் பாடி தமிழில் வழிபாடு நடத்தப்பட்டு இந்நிகழ்வு தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ’மகாவீரர் சிற்பம்... ராஜராஜ சோழன் கல்வெட்டுகள்’ - வரலாற்றின் எச்சங்கள் பொதிந்த கல்லுப்பட்டி!