smuggler arrested: தென்காசி மாவட்டம் புளியங்குடி பகுதியில் கஞ்சா விற்பனை சட்டவிரோதமாக நடந்துவந்தது. கஞ்சா கடத்தல் கும்பல், போனில் ஆர்டர் பெற்று குறிப்பிட்ட பகுதிகளில் வாடிக்கையாளர்களுக்கு சப்ளை செய்து வந்தனர்.
இதையடுத்து கடத்தல் கும்பலை பிடிக்க புளியங்குடி எஸ்.ஐ. பாரத்லிங்கம் தலைமையில் காவலர் சிவராம கிருஷ்ணன் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு கண்காணித்து வந்தனர்.
இதில் புளியங்குடி தளவாய்புரம் பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த பூலித்துரை மகன் கார்த்திக்(20) என்பவர் வாடிக்கையாளர்களிடம் போனில் ஆர்டர் பெற்று கஞ்சா சப்ளை செய்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அவரை கையும் களவுமாக பிடிக்க திட்டமிட்ட தனிப்படை காவல்துறையினர், வாடிக்கையாளர் போன்று செல்போனில் கஞ்சா கேட்டு ஆர்டர் செய்தனர்.
போனில் வந்தது கஞ்சா ஆர்டரா? அல்லது அவருக்கு வைத்த ஆப்பா? என்று அறியாத கார்த்திக், கஞ்சாவுடன் புளியங்குடி டிஎன்புதுக்குடிக்கு சென்றார். அப்போது வாடிக்கையாளர் போல் சென்ற தனிப்படை காவல்துறையினர், கஞ்சா கடத்தலில் ஈடுபட்ட கார்த்திக்கை மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து ரூ.20 ஆயிரம் மதிப்புள்ள ஒன்றரை கஞ்சாவை பறிமுதல் செய்து, தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: வனத்துறை அமைச்சர் கா. ராமசந்திரனுக்கு கரோனா பாதிப்பு!