தென்காசி மாவட்டத்தில், மேற்குத் தொடர்ச்சி மலையடிவார பகுதியில் வாழை, தென்னை உள்ளிட்டவைகளை விவசாயிகள் அதிகளவில் பயிரிட்டு வருகின்றனர். பண்பொழி, வடகரை, கரிசல் குடியிருப்பு ஆகிய பகுதிகளில் வாழை பயிரிடப்பட்டு அறுவடைக்குத் தயார் நிலை இருந்தது.
இந்நிலையில், மேற்குத் தொடர்ச்சி மலையடிவார பகுதியில் காற்றுடன் பெய்து வந்த தொடர் மழையின் காரணமாக, ஏராளமான வாழை மரங்கள் முறிந்து விழுந்தன. இதனிடையே காட்டுப்பன்றிகளும் விளைநிலங்களுக்குள் புகுந்து வாழை மரங்களை சாய்த்து, வாழை பழங்களை கடித்து சேதப்படுத்தியுள்ளன. ஒரு தார் செவ்வாழை ரூ.800 முதல் 1000 ரூபாய் வரையிலும், வயல் வாழை ரூ.350 முதல் 400 ரூபாய் வரைக்கும், கற்பூரவள்ளி ரூ.500 முதல் 600 ரூபாய் வரை விற்பனையாகிறது.
தற்போது அறுவடைக்கு தயாரான நிலையில் காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தியதால் பெரும் இழப்பை விவசாயிகள் சந்தித்துள்ளனர். எனவே காட்டுப்பன்றிகள் விளைநிலங்களில் புகுவதை வனத்துறையினர் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், தமிழ்நாடு அரசு சேதங்களை கணக்கிட்டு விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கோரிக்கை வைத்துள்ளனர்.