தென்காசி மாவட்டம், வல்லம் பகுதியிலிருந்து கேரள மாநிலத்துக்கு அழுகிய காய்கறிகள் மூடைகளுக்கு அடியில் சுமார் 50க்கும் மேற்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகளை மறைத்து வைத்துக்கொண்டு சரக்கு வாகனம் கட்டளைகுடியிருப்பு அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது பூலாங்குடியிருப்புப் பகுதியில் இருந்து செங்கோட்டை நோக்கி வந்த கொண்டிருந்த அஜ்மல் என்பவரின் ஆட்டோ மீது சரக்கு வாகனம் எதிர்பாராத விதமாக மோதியது.
இந்த விபத்தில் ஆட்டோ சேதமடைந்து, ஓட்டுநர் அஜ்மல் காயமடைந்தார். ஆட்டோ மீது மோதிய சரக்கு வாகனம் நிலைதடுமாறி அருகில் இருந்த 15 அடி பள்ளத்தில் உருண்டு விழுந்தது. இதில் அந்த வாகன ஓட்டுநர் தப்பி ஓடிவிட்டார்.
விபத்து தொடர்பாக அக்கம் பக்கத்தினர் காவல் துறையினருக்கு கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த காவல் துறையினர் விபத்துக்குள்ளான வாகனத்தைப் பார்த்த போது, அதில் ரேசன் அரிசி கடத்தி வந்து விபத்துக்குள்ளாகியிருப்பது தெரியவந்தது.
பின்னர் பள்ளத்தில் கவிழ்ந்து இருந்த அரிசி கடத்தல் வாகனத்தையும், அரிசி மூட்டைகளையும் அப்புறப்படுத்தி காவல் துறையினர் காவல் நிலையம் கொண்டு சென்றனர்.
அரிசி கடத்திய வாகனம் விபத்து காரணமாக சிக்கியது. காய்கறி கொண்டு செல்கிறோம் என்ற போர்வையில் ரேஷன் அரிசி மூட்டைகள் அழுகிய காய்கறிகளோடு கேரளாவுக்கு மறைத்துக் கொண்டு செல்லப்பட்ட இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தின.
இந்தப் பகுதியிலுள்ள தமிழ்நாடு - கேரள எல்லையில் காவல் துறை சோதனைச்சாவடி இல்லாததால்தான், இந்த கடத்தல்கள் தொடர்கின்றன என்று மக்கள் குற்றச்சாட்டை முன்வைக்கின்றனர்.
இதையும் படிங்க: குற்றால அருவிகளில் குளிக்க மீண்டும் தடை நீட்டிப்பு!