தென்காசி: சங்கரன்கோவில் நகராட்சி அலுவலகம் அருகே உள்ள தற்காலிகப்பேருந்து நிலையம் அருகே சங்கரன்கோவில் டவுன் போலீசார் வழக்கமான வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சென்னை பதிவு எண் கொண்ட பைக்கில் வந்த இருவரை சந்தேகத்தின் அடிப்படையில் நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர்.
அவர்கள் முன்னுக்குப்பின் முரணாகப்பேசியதால் சந்தேகம் அடைந்த போலீசார் தொடர்ந்து அவர்கள் வந்த பைக்கை சோதனை செய்தனர். அதில் 500 ரூபாய் நோட்டு கட்டுகள் இருந்ததைக்கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து காவல் துறையினர் இருவரிடமும் நடத்திய விசாரணையில் இரண்டு சக்கர வாகனத்தில் வந்தவர்களுள் ஒருவர் சென்னையைச் சேர்ந்த நாகராஜ் என்பதும் மற்றொருவர் சங்கரன்கோவிலைச்சேர்ந்தவரும் தற்போது சென்னையில் வசித்து வரும் காஜா நஸ்மிதின் என்பதும் தெரியவந்தது. ஏற்கெனவே சென்னை நந்தம்பாக்கம் பகுதியில் கள்ளநோட்டு விவகாரத்தில் கைது செய்யப்பட்டு, தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் கள்ள நோட்டுகளை சங்கரன்கோவிலில் புழக்கத்தில் விட வந்ததும் தெரியவந்தது. உடனடியாக இருவரையும் கைது செய்து அவர்களிடம் இருந்த மூன்று லட்சம் ரூபாய் கள்ள நோட்டுகள் மற்றும் பைக்கை பறிமுதல் செய்தனர்.
மேலும் இந்தச்சம்பவத்தில் வேறு யாருக்கும் தொடர்பு இருக்கிறதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச்சம்பவம் சங்கரன்கோவில் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க:கருப்பு பணம் என காகித கட்டு கொடுத்து மோசடியில் ஈடுபட்டவர் கைது