தென்காசி: அருளாட்சி அருகே உள்ள வேலாயுதபுர கிராமத்தில் மிகப்பெரிய இயேசுநாதரின் உருவ சிலை அமைக்கப்பட்டுள்ளது. இயேசுநாதர் சிலுவையை சுமந்து செல்வது போல் இந்த சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்திலே முதன்முறையாக மிகப்பெரிய இயேசுநாதரின் திருவருட்சிலை குருசு மலை மாதா கோவில் அருகே கட்டப்பட்டது மிகவும் பிரசித்த பெற்றதாக அமைந்துள்ளது. மலை அடிவாரப் பகுதியில் இந்த இடம் உள்ளதால் காற்றோட்டமான இடமாகவும் மிகவும் கண்களுக்குக் கவர்ச்சியான இயற்கை எழில் மிகுந்த பகுதியாகவும் அமைந்துள்ளது.
மேலும், இந்த சிலையில் உள்ள சிலுவை 25 அடி உயரமும், அதனைச் சுமந்து செல்லும் இயேசுநாதர் 20 அடி உயரமும் உள்ளது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த சிலையினை பேராயர்கள் பிரதிஷ்டை செய்து திருப்பலி நடத்தினர்.
திருப்பலி நடந்த பொழுது வேலாயுதபுரம், அருளாட்சி, புளியங்குடி, சிந்தாமணி மற்றும் கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஏராளமான கிறிஸ்தவ பெருமக்கள் கலந்து கொண்டனர். மேலும் இந்த விழாவில் அனைத்து மதத்தினரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
வருகைதந்த அனைத்து பொதுமக்களும் ஆலயத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள இயேசுநாதரின் சிலையைக் கண்டு மகிழ்ந்ததோடு, அந்தப் பகுதியில் நடைபெற்ற பிரார்த்தனையில் கலந்துகொண்டு, பிரார்த்தனைகள் செய்தனர்.
அதனைத் தொடர்ந்து, பேராயர்கள் பொதுமக்கள் அனைவருக்கும் ஆசி வழங்கினர். இந்த விழாவில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை சுமார் 2000-க்கும் மேற்பட்ட நபர்கள் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர். மேலும் இந்த விழாவின் முடிவில் கிறிஸ்துவர்கள் அனைவருக்கும் நற்கருணை வழங்கப்பட்டது.
இயேசுநாதரின் சிலையை பாளையங்கோட்டையில் வசிக்கும் லொயோலா பப்ளிகேஷன் உரிமையாளர் இ.பெர்க்மான்ஸ் சார்பில் இந்த சிலை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்நிகழ்ச்சியைப் பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயர்.எஸ்.அந்தோணிசாமி தலைமை வகித்து திருச்சிலுவை சுமந்த ஆண்டவர் சுருபத்தைத் திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து இரவு 7.30 மணிக்கு சிறப்பு திருப்பலி நடந்தது. இரவு 9 மணிக்கு விருந்து நடைபெற்றது. இந்த விருந்தில் மதத்திற்கு அப்பாற்பட்டு ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் மேலும் இவ்விழாவில் 30க்கும் மேற்பட்ட அருட்தந்தையர்கள் கலந்து கொண்டனர்.
இந்த விழா ஏற்பாட்டை வேலாயுதபுரம் பங்குத்தந்தை வ.எட்வின் ஆரோக்கிய நாதன் மற்றும் லொயோலா பப்ளிகேஷன் உரிமையாளர் இ.பெர்க்மான்ஸ் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: விநாயகர் சதுர்த்தி; தஞ்சையில் ஸ்ரீ மஹாகணபதி கோயில் திருத்தேரோட்டம்!