தென்காசி மாவட்டம் மத்தளம்பாறை பகுதியைச் சேர்ந்தவர் பொன்னையா. இவருக்கு ஆயிரம்பேரியை அடுத்து பழைய குற்றாலம் அருகே சுமார் நான்கு கோடி மதிப்பிலான வேளாண் நிலம் உள்ளது. இந்த வேளாண் நிலத்தை சிலர் தங்கள் பெயரில் போலி ஆவணங்கள் தயார்செய்து முறைகேட்டில் ஈடுபடுவதாகக் கூறி தென்காசி மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தார்.
இதனைத்தொடர்ந்து பாதிக்கப்பட்ட பொன்னையா செய்தியாளர்களிடம் கூறுகையில்,
"பழைய குற்றாலம் அருகே தனக்குச் சொந்தமான மூன்று ஏக்கர் நிலத்தில் வேளாண்மை செய்து வாழ்ந்துவருகின்றேன். தற்போது எனக்குச் சொந்தமான நிலத்தை, எனக்கு அறிமுகமே இல்லாத தேனி மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன் என்பவர் என்னுடைய ஆதார் அட்டையைப் பயன்படுத்தி, அதில் வேறு ஒருவரின் புகைப்படத்தை மாற்றி, போலியாக அவர்கள் பெயரில் பத்திரம் தயார்செய்துள்ளனர்.
மேலும் அந்த நிலத்தை தற்போது விற்பனை செய்வதற்கும் முயன்றுவருகின்றனர். எனவே எனக்குச் சொந்தமான நிலத்தை மீட்டுத் தரக்கோரியும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரியும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்துள்ளேன்" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:போலி ஆவணம் மூலம் நிலத்தை அபகரிக்க முயற்சிப்பதாக ஆட்சியரிடம் மனு