தென்காசி : மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டியுள்ள குற்றால அருவிகளில் ஆண்டுதோறும் தென்மேற்கு பருவமழை காலமான ஜூன் , ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மூன்று மாத காலங்கள் சாரல் மழை பொழியும் காலமாகும். இதன் காரணமாக இங்கு உள்ள அருவிகளில் குளிப்பதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 80 லட்சம் சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வது வழக்கமாக இருந்து வருகிறது.
இந்த ஆண்டு தென்மேற்குப் பருவமழை, ஒரு மாதம் தாமதமாக பெய்தாலும்; அவ்வப்போது உருவாகும் புயல் மழை காரணமாக அருவிகளுக்கு நீர் வரத்து தொடர்ந்து இருந்து வருகிறது. குற்றாலத்தில் தற்போது சீசன் களை கட்டி வருகிறது. இங்குள்ள மெயின் அருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம் அருவி, புலி அருவி ஆகிய அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கொட்டுகிறது.
இதனால் அனைத்து அருவிகளிலும் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியுடன் குளித்து வருகிறார்கள். இன்றும் நாளையும் விடுமுறை நாட்கள் என்பதால் அதிகமான சுற்றுலாப் பயணிகள் குற்றாலத்தில் குவிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சீசனை முன்னிட்டு ஏராளமான உணவகங்கள் செயல்படத் தொடங்கியுள்ளன. சுற்றுலா பயணிகளுக்கு ஏற்றவாறு நார்த் இண்டியன், சவுத் இண்டியன், சைனீஸ், மண்பானை சமையல் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த சில நாட்களாக சுற்றுலாப் பயணிகளுக்கு சுகாதாரமற்ற உணவுப்பொருள்கள் வழங்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனையடுத்து தென்காசி வட்டார உணவுப்பொருட்கள் கலப்பட தடுப்புப்பிரிவு அதிகாரி நாக.சுப்பிரமணியன் தலைமையில் உணவகங்களில் அதிரடி சோதனை நடைபெற்றது.
அப்போது சில தனியார் ஓட்டல்களில் அதிக நிறங்கள் சேர்த்து விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த மீன்கள் மற்றும் சிக்கன் ஆகியவற்றை பறிமுதல் செய்து பினாயில் ஊற்றி அழித்தனர். குற்றாலம் பகுதிகளில் சீசன் களை கட்டி உள்ள நிலையில் உணவகங்களில் உயிருக்கு உலை வைக்கும் வண்ணம் கெட்டுப்போன இறைச்சிகள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.
இதனைத் தடுக்க உணவுப்பொருட்கள் கலப்பட தடுப்புப்பிரிவு அதிகாரி தொடர் சோதனையில் ஈடுபடவேண்டும்; தரமற்ற உணவுப்பொருள்கள் விற்பனை செய்யும்கடைகள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று சமூக ஆர்வலர்களும் சுற்றுலாப் பயணிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க : Salem:அடிப்படை வசதிகள் எங்கே? தர்ணாவில் ஈடுபட்ட எம்எல்ஏ அருள் - சேலத்தில் நடப்பது என்ன?