தென்காசி: சங்கரன்கோவில் அருகே உள்ள நவநீதகிருஷ்ணபுரத்தைச் சேர்ந்த ஆடு மேய்க்கும் கூலித் தொழிலாளியின் மகள் முத்துலட்சுமி, தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலில் மாநிலத்தில் மூன்றாம் இடம் பிடித்து சாதனைப் புரிந்துள்ளார். தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள நவநீதகிருஷ்ணபுரத்தைச் சேர்ந்தவர்கள், சண்முகசாமி, வள்ளியம்மாள் தம்பதியர். இவர்களின் மகள் முத்துலட்சுமி.
இவர் தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலில் மாநிலத்தில் மூன்றாம் இடம் பிடித்து சாதனைப் படைத்து உள்ளார். எளிமையான குடும்பத்தைச் சேர்ந்த முத்துலட்சுமி, ஆரம்பகால பள்ளி படிப்பை நவநீத கிருஷ்ணபுரத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளியில் படித்துள்ளார். பின்னர் 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை சங்கரன்கோவில் - ராஜபாளையம் சாலையில் உள்ள எஸ்.என்.ஆர் மேல்நிலைப் பள்ளியில் படித்து உள்ளார்.
தற்போது வெளியாகி உள்ள 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம் ஆகிய நான்கு பாடங்களில் 100 மதிப்பெண்கள் பெற்று முத்துலட்சுமி 600க்கு 583 மதிப்பெண்கள் பெற்று சாதனைப் படைத்தார். அதனைத் தொடர்ந்து இவர் கால்நடை மருத்துவப் படிப்பில் சேர்வதற்காக, தேர்வு எழுதிய நிலையில் கால்நடைப் பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலில் தமிழகத்தில் மூன்றாம் இடம்பிடித்து மாணவி சாதனைப் படைத்து உள்ளார்.
அவருக்கு அவரது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் வாழ்த்துகளைத் தெரிவித்தனர். மேலும் இது குறித்து மாணவி கூறும் போது, ''பெற்றோர்கள் கூலி வேலைக்குச் சென்று தான் என்னைப் படிக்க வைத்தார்கள். தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலில் மாநிலத்தில் மூன்றாம் இடம் பிடித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. எங்கள் ஊரில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சங்கரன்கோவிலுக்கு சென்று தான் படிக்கக்கூடிய சூழ்நிலை உள்ளது.
மேலும் எங்கள் ஊரில் இருந்து படிக்கச் செல்லும் மாணவ, மாணவிகள் பேருந்து வசதி இல்லாமல் அவதிப்படுகின்றனர். எனவே அரசுப்பேருந்து வசதிகளை எங்கள் ஊரில் ஏற்படுத்தித் தர வேண்டும்'' என்று மாணவி கேட்டுக் கொண்டார்.
மேலும் பேசிய மாணவி, ''நாங்கள் கஷ்டப்பட்டு படித்துள்ள நிலையில் மேல்படிப்பிற்காக எங்களுக்கு தமிழக அரசு உதவி செய்திட வேண்டும்'' எனவும் அவர் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
இந்த நிலையில் இவர் வேளாண் பல்கலைக்கழகத்தில் தேர்வு எழுதிய நிலையில் வெளியிடப்பட்டுள்ள, தரவரிசைப் பட்டியலில் 25 இடங்களில், இந்த மாணவி மூன்றாம் இடம்பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: 10ஆம் வகுப்பு துணைத் தேர்வு முடிவுகள் வெளியானது; 11ஆம் வகுப்பு முடிவுகள் 28ஆம் தேதி வெளியீடு