தமிழ்நாட்டில் கரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து கொண்டே வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக ஜூலை 31ஆம் தேதி வரை தமிழ்நாட்டில் ஊரடங்கை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது. இந்நிலையில், தென்காசி மாவட்டத்தை பொறுத்தவரை தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக வெளி மாவட்டம் வெளி மாநிலத்தில் இருந்து வந்தவர்கள் என வீடுகளில் ஒன்பது ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களும், அரசு முகாம்களில் 700க்கும் மேற்பட்டவர்களும் தனிமைப்படுத்தி கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
மேலும் மாவட்டத்தில் 21 ஆயிரத்து 948 நபர்களுக்கு சளி மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளன. இதனிடையே, மாவட்டத்தில் ஒரே நாளில் 62 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் ஆலங்குளம், இலஞ்சி, ஊத்துமலை, புளியங்குடி, சிவகிரி, வடகரை ஆகிய பகுதிகளில் இருந்து 54 பேரும், வெளி மாநிலத்தை சேர்ந்த ஒரு நபரும், வெளி மாவட்டத்தை சேர்ந்த ஐந்து நபர்கள் அடங்குவர். இதன் காரணமாக மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 530ஆக உயர்ந்துள்ளது. இதில் 324 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.