தென்காசி: தமிழ்நாட்டில் குடும்பத் தலைவியருக்கு மாதம் 1,000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கும் திட்டம், இம்மாதம் 15 ஆம் தேதி துவங்கப்பட உள்ளது. எனவே, இந்த உரிமைத் தொகையை பெற தகுதியுடைய பெண்கள் யார் என்பது குறித்த அறிவிப்பாணையையும் அரசு வெளியிட்டு இருந்தது.
மேலும் இந்த திட்டத்தில் சுமார் 1 கோடி பெண்கள் பயன் பெறவுள்ளதாகவும், இதற்காக தமிழ்நாடு அரசு வருடத்திற்கு 12 ஆயிரம் கோடி ஒதுக்கும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டு இருந்தது. அதற்காக தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் சுமார் 1 கோடியே 63 லட்சத்திற்கும் அதிகமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டு, தகுதியுள்ளவர்களை தேர்ந்தெடுக்கும் பணி அதிதீவிரமாக நடைபெற்றது.
மேலும் விண்ணப்பத்தில் தகுதியானவர்களின் பட்டியலும், நிராகரிக்கப்பட்டவர்களின் பட்டியலும் தயாரிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. தற்போது மகளிர் உதவித் தொகை தருவதற்கு இன்னும் 10 நாட்களுக்கும் குறைவாகவே உள்ளது. ஆனால் பலரது விண்ணப்பங்களுக்கு முறையாக விசாரணைக்கு அழைக்கப்படவில்லை எனவும் பல குற்றச்சாட்டுகள் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், தென்காசி மாவட்டத்திற்கு பல்வேறு நலத்திட்டங்கள் மற்றும் ஆய்வுக் கூட்டங்களில் பங்கேற்பதற்காக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வருகை தந்தார். அப்போது தென்காசி நகராட்சி அருகே வந்து கொண்டிருந்தபோது, 10-வது வார்டு பகுதியைச் சேர்ந்த கவுன்சிலர் ராசப்பா தலைமையில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் அமைச்சர் உதயநிதி காரை வழிமறித்தனர்.
மேலும், தாங்கள் மகளிர் உரிமை தொகைக்காக விண்ணப்பித்து உள்ள நிலையில், தங்களுக்கு முறையான விசாரணை வரவில்லை என்றும் தாங்கள் 100% தகுதியானவர்கள் எனவே தங்களுக்கு மகளிர் உரிமைத் தொகை தர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர். மகளிர் உரிமைத் தொகை தாருங்கள் முதல்வரின் மகனே என்ற பதாகையுடன் காத்திருந்து பெண்கள் உள்ளிட்டோர் கோரிக்கை மனு அளித்தனர்.
மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தான் இது குறித்து உரிய விசாரணை மேற்கொள்வதாகவும், மேலும் தங்கள் மனு குறித்து மாவட்ட ஆட்சியரிடம் முறையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க கூறுவதாகவும் தெரிவித்ததாக பொது மக்கள் கூறினர்.