Tenkasi Krithika Patel kidnapping case: தென்காசி: தென்காசியில் காதல் திருமணம் செய்த தனது மகளை குஜராத்தைச் சேர்ந்த அவரது பெற்றோர் கடத்திய வழக்கில், மூன்று மாதங்களாக தலைமறைவாக இருந்த கிருத்திகாவின் தந்தை நவீன் பட்டேலை தனிப்படை போலீசார் கைது செய்தனர். தென்காசி மாவட்டத்தில் கிருத்திகா பட்டேல் என்ற பெண், அதே பகுதியைச் சேர்ந்த வினித் என்பவரை கடந்த 3 மாதங்களுக்கு முன் காதல் திருமணம் செய்த நிலையில், பெற்றோர்களால் கடத்தப்பட்ட சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனைத்தொடர்ந்து கிருத்திகாவை கடத்திய தாய், தந்தை, அவரது உறவினர்கள் மீது குற்றாலம் காவல்துறையில் வழக்குப்பதிவு செய்த நிலையில் அவர்கள் தலைமறைவானார்கள். இதற்கிடையே தலைமறைவான கிருத்திகாவின் தந்தை நவீன் பட்டேல், தாய் தர்மிதா பட்டேல் உள்ளிட்டோரை தனிப்படை போலீஸார் கடந்த மூன்று மாதங்களாக தேடி வந்தனர்.
இந்த நிலையில் தமிழ்நாடு தனிப்படை போலீஸார் கிருத்திகாவின் தந்தை நவீன் பட்டேலை குஜராத்தில் கைது செய்துள்ளனர். மேலும், அவருடன் கிருத்திகாவும் இருந்துள்ளதால் கிருத்திகாவையும் சேர்த்து முறையாக அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, உரிய அனுமதியுடன் தமிழ்நாடு அழைத்து வருவதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டது.
தென்காசி மாவட்டம், இலஞ்சி அருகே உள்ள கொட்டாங்குளத்தைச் சேர்ந்த வினித் என்பவரும், குஜராத்தைச் சேர்ந்த கிருத்திகா பட்டேல் என்பவரும் ஒருவருக்கொருவர் காதலித்து வந்த நிலையில், திருமணமும் செய்துகொண்டனர். இவர்களின் திருமணத்திற்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்து வந்த கிருத்திகாவின் குடும்பத்தினர் குஜராத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு வந்து வினித்தின் வீட்டில் புகுந்து, அவரை வலுக்கட்டாயமாக கடத்திச் சென்ற வீடியோ வெளியாகியது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி, தமிழ்நாடெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனைத்தொடர்ந்து, கிருத்திகாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மீது வினித் அளித்தப் புகாரின் பேரில், கிருத்திகாவின் உறவினரை போலீசார் கைது செய்தனர். இதனிடையே, தனது விருப்பத்துடன் தான் வினித்தை விட்டு தனது பெற்றோருடன் சென்றதாகவும், இதில் யாரும் தன்னைக் கட்டாயப்படுத்தவில்லை என்றும்; கிருத்திகா வெளியிட்ட மற்றொரு வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. மேலும், அவருக்கு ஏற்கனவே ஒருவருடன் திருமணமாகி இருந்ததாக வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகின.
இத்தனைக்கும் நடுவே, வினித் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ததைத் தொடர்ந்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் ஆஜர்படுத்தப்பட்ட கிருத்திகா, தனது பெற்றோருடனே செல்வதாக விருப்பம் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் கிருத்திகாவுக்கு கவுன்சிலிங் கொடுக்கப்பட்டு அவரது உறவினர்களிடம் செல்லும்படி நீதிமன்றம் உத்தரவிடப்பட்டது.
இதனைத்தொடர்ந்து, ஆரம்பத்தில் வீடியோ வெளியான போதே போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டிருந்தால், இத்தகைய பிரச்னைகளைத் தவிர்த்திருக்கலாம் என பலதரப்பினரும் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். இந்த வழக்கில் தாமதமாக, வழக்குப்பதிவு செய்து அலட்சியமாக செயல்பட்டதாக கூறி, குற்றாலம் காவல்நிலைய ஆய்வாளர் அலெக்ஸ் என்பவரை தென்மண்டல ஐஜி பணியிடைநீக்கம் செய்து உத்தரவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கிருத்திகா கடத்தல் விவகாரம்: குற்றாலம் இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்!