தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள வாகைகுளத்தைச் சேர்ந்தவர் அணைக்கரை முத்து (65). விவசாயியான இவர், தோட்டத்தில் காய்கறிகள் பயிரிட்டு விவசாயம் செய்துவந்தார். இவரின் தோட்டத்து பயிர்களை காட்டுப் பன்றிகள் சேதப்படுத்தி வருவதால், தோட்டத்தை சுற்றி மின்வேலி அமைத்துள்ளதாக வந்த தகவலையடுத்து, அணைக்கரை முத்துவை வனத்துறையினர் கடந்த 22ஆம் தேதி இரவு விசாரணைக்காக அழைத்துச் சென்றனர்.
இதைத்தொடர்ந்து அணைக்கரை முத்துவிற்கு மாரடைப்பு வந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, வனத்துறையினர் உடனடியாக தென்காசி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால், அணைக்கரை முத்து உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து ஆழ்வார்குறிச்சி காவல் துறையினர் வழக்கு தொடுக்கப்பட்டு, மாஜிஸ்திரேட் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், அணைகரை முத்துவின் உடல் நெல்லை அரசு மருத்துவமனையில் உடற்கூறாய்வு பரிசோதனை செய்யப்பட்டது. இது குறித்து அணைக்கரை முத்துவின் மகள் வசந்தி கூறுகையில், ”எங்களின் அனுமதி இல்லாமலேயே உடற்கூறு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மேலும், எனது தந்தையின் உடலில் 18 இடங்களில் காயம் உள்ளதாக மாஜிஸ்திரேட் கூறினார். ஆனால் மதுரை நீதிமன்றம் தகவலின்படி உடலில் நான்கு இடங்களில் காயம் உள்ளது எனக் கூறுகின்றனர். எதுவாயினும் வனத்துறையினர். எனது தந்தை அணைக்கரை முத்துவை தாக்கியது உறுதியாகி உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட வனத்துறை அலுவலர்களை கைது செய்ய வேண்டும், அதுவரை உடலை வாங்க மாட்டோம் எனத் தெரிவித்தனர்.
இதனிடையே, மதுரை உயர் நீதிமன்றத்தில் வழக்கை விசாரித்த நீதிபதி பொங்கியப்பன், உயிரிழந்த விவசாயி அணைகரை முத்து உடலை மறு உடற்கூறாய்வு செய்ய உத்தரவிட்டுள்ளார். அதன்படி, நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தடயவியல் துறை தலைவர், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தடயவியல் துறை தலைவர், பேராசிரியர் ஒருவர் அடங்கிய குழு சார்பில் மறு உடற்கூறாய்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:கடன் பிரச்னையால் விவசாயி தற்கொலை