தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டப்பேரவை தொகுதி திமுக உறுப்பினர் பூங்கோதை ஆலடி அருணா நேற்று (செப்.8) நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணனை நேரில் சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தார்.
பின்னர் வெளியே வந்த அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், "கடந்த ஆகஸ்ட் 26ஆம் தேதியன்று மாறாந்தை அருகில் அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் திருமலை குமாரசாமி, ரித்திக் சந்தர் ஆகிய இருவர் விபத்துக்குள்ளாகினர். இதையடுத்து தென்காசி மாவட்டம் பூலாங்குளத்தைச் சேர்ந்த திருமலை குமாரசாமி சிகிச்சை பலனின்றி மறுநாள் உயிரிழந்தார். விபத்து நடைபெற்று 13 நாட்கள் ஆகியும் இதுவரை காவல்துறையோ மாவட்ட ஆட்சியரோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
உயிரிழந்த திருமலை குமாரசாமியின் மனைவி சரண்யா இரண்டு குழந்தைகளுடன் வாழ்வாதாரமின்றி தவித்துவருகிறார். அரசு அலுவலர்கள் இதுவரை நேரில் சென்று ஆறுதல் சொல்லவில்லை. இழப்பீடு எதுவும் வழங்கவில்லை. இதைவிடக் கொடுமை என்னவென்றால் விபத்து நடந்து 13 நாட்கள் ஆகியும் இதுவரை விபத்தை ஏற்படுத்திய நபர்களை காவல்துறை கண்டுபிடிக்கவில்லை.
எனவே உயிரிழந்த திருமலை குமாரசாமியின் மனைவிக்கு உரிய 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்குவதுடன் அவருக்கு தகுதி அடிப்படையில் அரசுப் பணி வழங்க வேண்டும் என்று கோரி நேற்று மாவட்டக் காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்துள்ளேன்.
மாறாந்தை பகுதி தென்காசி மாவட்டத்திற்குள் வருகிறது. ஆனால் மாறாந்தை பகுதியை இன்னும் தென்காசி மாவட்டத்திற்கு உள்பட்ட ஆலங்குளம் காவல் நிலையத்தில் இணைக்காமல் உள்ளனர். இதனால் திருநெல்வேலி மாவட்டம் சீதற்பநல்லூர் காவல் நிலையத்தில் மாறாந்தை பகுதியை இணைத்துள்ளனர் திருநெல்வேலி தென்காசி நெடுஞ்சாலைத்துறை முறையாகத் திட்டமிடாததால் அச்சாலை சிதிலமடைந்து விபத்துகள் அடிக்கடி நடைபெறுகிறது. இதுபோன்ற நிகழ்வுகளில் மெத்தனம் காட்டும் தமிழ்நாடு அரசை வன்மையாக கண்டிக்கிறேன்" என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க...மயிலாடுதுறையில் ஏற்பட்ட தீ விபத்தில் இரு வீடுகள், உணவகம் சேதம்!