தென்காசி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மாதாந்திர விவசாயிகள் குறைதீர் கூட்டம், மாவட்ட ஆட்சியர் துரை.ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. இதில், அனைத்து வட்டார பகுதிகளில் இருந்தும் விவசாயிகள் பங்கேற்றனர். பின்னர், விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியரிடம் முன்வைத்தனர்.
இந்த நிலையில் தென்காசி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை பொய்த்து போன சூழ்நிலையில் குறுவை சாகுபடி மேற்கொண்ட நிலையில் ஆயிரக்கணக்கான பயிர்கள் கருகி காணப்பட்டது. இந்த நிலையில் தங்கள் பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை முன் வைத்தனர்.
இதற்கு மாவட்ட ஆட்சியர், அணையில் குறைவாக தண்ணீர் இருக்ககூடிய நிலையில், விவசாயிகள் குளத்து தண்ணீரை நம்பி விவசாயம் மேற்கொண்டுள்ளனர். அதேசமயம் பருவமழையும் சரியாக பெய்யாத காரணத்தினால் இவ்வாறான சூழல் ஏற்பட்டுள்ளது. வறட்சி மாவட்டமாக அறிவிக்கக்கூடிய சூழலை தமிழ்நாடு அரசு எடுக்க வேண்டும் என கூறியுள்ளார். இந்நிலையில், தங்களது எந்த குறைகள் குறித்து எந்தவித நடவடிக்கையும் மாவட்ட நிர்வாகம் எடுக்கப்படவில்லை என விவசாயிகள் அடுக்கடுக்கான குற்றச்சாட்டை முன் வைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அதற்கு பதிலளிக்கும் விதமாக மாவட்ட ஆட்சியர் துரை.ரவிசந்திரன், தங்கள் குறைகள் தீர்க்கப்படவில்லை என்றால் ஏன் வருகிறீர்கள்? என விவசாயிகளை பார்த்து அலட்சியமாக கேள்வி எழுப்பியுள்ளார். இதனைக் கண்டு விவசாயிகள் ஆத்திரமடைந்தனர். பின்னர், மாவட்ட ஆட்சியரை கண்டித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, விவசாயிகள் குறைதீர் கூட்டத்திலும் ஆட்சியர் அலட்சியமாக பதில் சொல்வதும், கூட்டம் கூச்சல் குழப்பமாக நடைபெற்று வருவது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: காலை உணவுத்திட்டம் விரிவாக்கம் - உணவு பரிமாறி மாணவர்களுடன் உணவருந்திய முதல்வர் ஸ்டாலின்!