தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே பண்பொழி கிராமத்தின் மலை உச்சியில் பிரசித்தி பெற்ற திருமலைக் கோயில் அமைந்துள்ளது. இக்கோயிலில் ஆண்டுதோறும் தை மாதம் தைப்பூச திருவிழா 10 நாட்கள் மிகவும் விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.
தற்போது கரோனா தொற்று பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் கோயில்களில் திருவிழாக்கள் நடத்துவதற்கு தடையும், கட்டுப்பாடுகளும் தமிழ்நாடு அரசு விதித்துள்ளது.
இந்நிலையில் திருமலை குமாரசாமி கோயிலில் தைப்பூசத் திருவிழா நடத்துவதற்கு அனுமதி வழங்கக் கோரி அப்பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் தென்காசி மாவட்ட ஆட்சியர் சமீரனிடம் மனு அளித்தனர்.
இதுதொடர்பாக பண்மொழி கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில், "தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 10 நாட்கள் நடைபெறும் என்பதால், பாரம்பரிய முறைப்படியும், ஆகம விதிகளின்படியும் ஆண்டாண்டு காலமாக நடக்கும் வழக்கமான நடைமுறைகளான கொடியேற்றுதல், சுவாமி சப்பரம் எழுதுதல், சுவாமி வீதி உலா, சண்முகர் எதிர்சேவை, தேரோட்ட அபிஷேகங்கள் உட்பட அனைத்து நிகழ்ச்சிகளும் நடைபெறுவதற்கு அனுமதி வழங்க வேண்டும். இந்நிகழ்ச்சிகளை கரோனா கட்டுப்பாட்டு விதிகளை பின்பற்றி நடத்திட அனுமதி அளிக்க வேண்டும்" என்று கோரிக்கை வைத்துள்ளனர்.