தென்காசி: வடக்கு புதூர் கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் LKG முதல் 12ஆம் வகுப்பு வரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் காலை மற்றும் மாலை என இரு வேளையும் பள்ளி வாகனங்களிலேயே பயணம் செய்து வருகின்றனர். இந்த நிலையில் அந்தப் பள்ளியின் வாகனம் ஒன்றில் பின்புற கண்ணாடி உடைந்து உள்ளது.
கண்ணாடி இல்லாத போதும் மாணவர்களின் உயிரைக் கருத்தில் கொள்ளாத பள்ளி நிர்வாகம் அதே வாகனத்தில் மாணவர்களை ஏற்றிச் செல்லும் நிகழ்வும் நடந்து வருகிறது. அது மட்டுமில்லாமல் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள வாகனத்தில் மாணவர்களை ஏற்றிக்கொண்டு மிகவும் அதிவேகமாகப் பள்ளிக்கு செல்வதும் குறிப்பிடத்தக்கது.
மேலும், பேருந்து செல்லும் வேகத்தின் காரணமாக ஏதாவது ஒரு பள்ளத்தில் விழுந்து ஏறினால் கூட அதில் பயணம் செய்யும் மாணவர்கள் பின்புறம் வழியாக தெறித்து விழுந்து உயிரிழப்பு ஏற்படும் அபாய நிலை உள்ள நிலையில் பள்ளியின் வாகனம் இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வாகனத்தின் உள்ளே இருக்கும் மாணவர்களின் உயிருக்கு உத்தரவாதம் இன்றி பள்ளி செயல்பட்டுக் கொண்டு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.
இதையும் படிங்க: சிக்னலை பார்க்காமல் கடந்த சென்னை மின்சார ரயில்.. அரக்கோணம் ரயில் நிலையத்தில் நடந்தது என்ன?
பள்ளி வாகனத்தின் பின்புற கண்ணாடி உடைந்து ஆபத்தான முறையில் மாணவர்கள் பயணம் செய்யும் வீடியோவானது தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகப் பரவி வருகின்றது. தனியார் பள்ளிகள் பேருந்து கட்டணத்தை கட்டாயப்படுத்தி வசூலித்து வரும் நிலையில், பேருந்தை சரிவர பராமரிக்காமல் மாணவர்கள் உயிரோடு விளையாடும் இது போன்ற செயலுக்கு சமூக வலைதளங்களில் வன்மையான கண்டனம் எழுந்து உள்ளது.
மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு பள்ளி வாகனங்கள் அனைத்தும் சங்கரன்கோவில் ஆர்டிஓ தலைமையில் நடைபெற்ற ஆய்வுக்குப் பின்னரே இந்த வாகனங்கள் அனைத்தும் சாலையில் இயக்கப்பட்டன. இருப்பினும், வாகன ஆய்வு கண்துடைப்புக்காக நடந்ததாகவே சமூக வலைதளத்தில் நெட்டிசன்கள் பதிவிட்டும், கருத்து தெரிவித்தும் வருகின்றனர்.
எனவே, பள்ளியில் செயல்படும் அனைத்து வாகனங்களும் முழு தகுதியுடன் இருக்கின்றதா என்பதை மீண்டும் ஒருமுறை ஆய்வு செய்ய வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது. பள்ளி வாகனத்தின் பின்புற கண்ணாடி உடைந்த நிலையில் மாணவர்கள் பயணம் செய்த சம்பவம் பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: புளியரை சோதனைச் சாவடியில் கையூட்டு - வெளியான வீடியோவால் காவலர் சஸ்பெண்ட்