தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே கீழச்சுரண்டை பகுதிகளில் உள்ள மெடிக்கல்களில் மருந்து மாத்திரைகள் விற்பனைகளுடன் நோயாளிகளுக்கு ஊசி, குளுக்கோஸ் ஏற்றி சிகிச்சை அளிப்பதாக ஆட்சியருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் உத்தரவிட்டார்.
இதன் அடிப்படையில் வீகே புதூர் தாசில்தார் முருகு செல்வி, பாவூர்சத்திரம் அரசு மருத்துவர் கீர்த்திகா ஆகியோர் அடங்கிய குழுவினர் கீழச்சுரண்டை மெடிக்கல்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது கீழச்சுரண்டை மெயின் ரோட்டில், முருகன் என்பவரின் பிரியா மெடிக்கல், வேல் மயில் என்பவரின் வசந்தம் மெடிக்கல் ஆகியவற்றில் சோதனை நடத்திய போது, அதில் மெடிக்கல் நடத்துவதற்கான டி-பார்ம் படிப்பு இல்லாததும் அப்பகுதியில் உள்ள பொது மக்களுக்கு ஊசி செலுத்தியும் குளுக்கோஸ் ஏற்றியும் வந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து இரண்டு மெடிக்கல்களையும் மூடி அலுவலர்கள் சீல் வைத்தனர்.
இது குறித்து சுகாதாரத் துறையினர் கூறும்போது, பங்களா சுரண்டையை சேர்ந்த 55 வயது மதிக்கத்தக்க ஒருவருக்கு வீட்டிற்கு சென்று ஊசி மற்றும் குளுக்கோஸ் செலுத்தியுள்ளனர். ஆனால் அவருக்கு நோயிலிருந்து முன்னேற்றம் ஏற்படாததால் தென்காசி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நோயிலிருந்து விடுபட அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மக்கள் செல்ல வேண்டும். போலி மருத்துவரிடம் சென்று உயிரை மாய்த்துக் கொள்ள வேண்டாம் என்று கேட்டுக்கொண்டார்.