தென்காசி: சங்கரன்கோவில் நகராட்சிக்குச் சொந்தமான குப்பைக் கிடங்கில் தினசரி சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள குப்பைகளை அள்ளும் பணியை துப்புரவு பணியாளர்கள் செய்து வருகின்றனர். மேலும் இந்த குப்பைக் கிடங்கு மலைபோல் குவிந்து கிடப்பதால், இங்கு கொட்டப்படும் குப்பைகளை தினசரி எரிப்பது வழக்கம்.
இவ்வாறு தினந்தோறும் குப்பைகளை எரிக்கும்போது, எரிபடும் குப்பைகளில் இருந்து வெளிவரும் கரும்புகைகள் மற்றும் பிற வாயுக்கள், சுவாசிக்கும் காற்றில் கலந்து பெருந்தொற்றுக்கு வழிவகுக்கும் என பொதுமக்கள் பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும், சிலர் கரும்புகைகளால் பெரும் அவதிக்குள்ளாகின்றனர்.
இதைத் தொடர்ந்து, சங்கரன்கோவில் பகுதியில் உள்ள குப்பைக் கிடங்கு பகுதியில் தற்போது பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பகுதியில் அதிகப்படியான குப்பைகள் கொட்டப்படுவதனால், நோய் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக பொதுமக்கள் அச்சம் தெரிவித்து வருகின்றனர். மேலும், இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் பலமுறை புகார் கொடுத்தும், அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் இருக்கின்றனர் என வேதனைத் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், தினந்தோறும் எரியூட்டப்படும் குப்பகைகளை வழக்கம்போல் அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி துப்புரவுத் தொழிலாளர்கள், மலைபோல் குவிந்திருந்த குப்பைகளுக்குத் தீ வைத்தனர். அப்போது, எரிந்து கொண்டிருந்த குப்பைகளில் திடீரென ஏதோ ஒரு மர்ம பொருள் வெடித்ததில், அப்பகுதி முழுவதும் தீப்பற்றி எரிந்து விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் நகராட்சி துப்புரவு பணியாளர் காளிமுத்து என்பவர் மீது தீ பற்றியது. விபத்தில் பலத்த காயமடைந்த காளிமுத்து, மேல் சிகிச்சைக்காக சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில மாதங்களாகவே சங்கரன்கோவில் நகராட்சியில் குப்பை பிரிப்பதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்று உள்ளதாகவும், நகராட்சியைச் சார்ந்த துப்புரவு பணியாளர்களுக்கு போதிய உபகரணங்கள் வழங்கப்படுவதில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
மேலும் நகராட்சி அதிகாரிகள், குப்பைகளை கட்டாயமாக தீ வைத்து எரிக்கச் சொல்வதாவும் தூய்மைப் பணியாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். எனவே, இது போன்ற செயல்கள் நடைபெறாமல் இருப்பதற்குத் தேவையான உபகரணங்களை துப்புரவு பணியாளர்களுக்கு வழங்க வேண்டுமென பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: பாதாளச் சாக்கடையை முறையாக அமைத்து பிறகு கான்கிரீட் சாலை அமைக்க வேண்டும்: பக்தர்கள் கோரிக்கை!