தமிழ்நாடு அரசு தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை நடைமுறைப்படுத்தும் விதமாக மாநில உணவு பாதுகாப்பு ஆணையத்தை அமைத்துள்ளது. இந்த அமைப்பின் தலைவராக நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அலுவலர் வாசுகி, தென்காசி மாவட்டத்திலுள்ள நியாயவிலைக் கடைகளில் நேற்று (ஜன.12) ஆய்வு நடத்தினார்.
அப்போது பொதுமக்களுக்கு வழங்கும் உணவு பொருள்கள், குடும்ப அட்டைதாரர்கள் குறைகள் குறித்தும் நேரடியாகக் கேட்டுத் தெரிந்துகொண்டார். தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் சமீரன் தலைமையில், துறை அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த உணவு பாதுகாப்பு ஆணையத்தின் தலைவர் வாசுகி, ”தமிழ்நாட்டில் மாவட்ட வாரியாக அனைத்து நியாயவிலைக்கடைகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருநங்கைகளுக்கு குடும்ப அட்டை வழங்குவதில் சிக்கல்கள் இருந்தது.
தற்போது ஒரே நாடு ஒரே ரேசன் கார்டு திட்டத்தின் கீழ் அவர்களுக்கும் உடனடியாக குடும்ப அட்டையை வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. பசியில்லா தமிழ்நாடு என்பதை உருவாக்கும் பொருட்டு கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், நரிக்குறவர் என அனைவருக்கும் குடும்ப அட்டை வழங்குவதில் இருக்கும் சிக்கல் நீக்கப்பட்டுவருகின்றன.
ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டத்தால் தமிழ்நாட்டின் நியாயவிலைக் கடைகளில் வழங்கும் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்படாது” என்றார்.
முதலமைச்சர் திட்டப்படி நியாயவிலைக் கடைகளில் கருப்பட்டி வழங்குவதற்கான வாய்ப்பு உள்ளதா? என செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு, வழங்குவதற்கான நடைமுறைகளும் வாய்ப்புகளும் உள்ளது எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:விவசாயம் தொழிலல்ல; வாழ்க்கை முறை - டிடிவி பொங்கல் வாழ்த்து!