தென்காசி மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியானது பரந்து விரிந்து காணப்படும் அடர்ந்த வனப்பகுதியாகும். இந்த வனப்பகுதியில் அவ்வப்போது அத்துமீறி நுழையும் வேட்டை கும்பலும், கடத்தல் கும்பலும் வனப்பகுதிக்குள் சர்வ சாதாரணமாக சென்றுவருவதும், வனப்பகுதியில் மலைத்தேன் எடுக்க செல்லும் கும்பல்களும், தீ வைத்துவிட்டு தப்பிவருவது வழக்கமாக உள்ளது.
இந்தநிலையில் நேற்று (அக்.5) செங்கோட்டை வனசரகத்திற்குட்டபட்ட புளியரை உக்கனம் வனப்பகுதியில் திடீரென பல நூறு ஏக்கர் பரப்பளவில் தீப்பிடித்து எரிந்த வண்ணம் உள்ளது. இந்தப் பகுதியில் அரியவகை மரங்கள் நிறைந்து இருக்கும். தீயின் காரணமாக அரியவகை மரங்கள் எரிந்து நாசமாகி வருகிறது.
காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் தீ கொளுந்துவிட்டு எரிந்து வருகிறது. மேலும் இந்த வனப்பகுதியில் யானைகள் மான், மிளா உள்ளிட்ட அரிய வகை விலங்கினங்களும் உள்ளன.
ஏற்கனவே இந்தப் பகுதியில் அத்துமீறி நுழைந்து ஈத்தல் வெட்டும் கும்பல் நடமாட்டம் இருப்பதாக வனத்துறையினர் ஐந்து பேர் மீது வழக்குப்பதிவு செய்த நிலையில், தற்போது மீண்டும் அந்த பகுதியில் தீப்பிடித்து எரிவது குறிப்பிடத்தக்கது.