தென்காசி: புதிய தமிழகம் கட்சியின் 25-ஆம் ஆண்டு வெள்ளி விழா நிகழ்ச்சிகள் விருதுநகர் மாவட்டத்தில் சிறப்பு மாநாடாக நடைபெறவுள்ளது. இதில் பல முக்கிய தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
இந்நிலையில், தென்காசி மாவட்டம் குற்றாலம் தனியார் விடுதியில் செய்தியாளர்களை சந்தித்த டாக்டர் கிருஷ்ணசாமி பேசியதாவது: "தீபாவளி பண்டிகைக்கு முன்தினம் கோவை கோட்டை மேடு பகுதியில் கார் வெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. அதனைத் தொடர்ந்து காரில் பல வெடி பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. தமிழகத்தின் மிகப்பெரிய தொழில் நகரமான கோவையின் ஸ்திர தன்மையை சீரழிக்கும் விதத்தில் இந்த கார் சிலிண்டர் வெடிப்பு நடந்துள்ளது.
தமிழகத்தில் நிரந்தர அமைதியை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நவம்பர் 17-ஆம் தேதி பல சமூக அமைப்புகள், மத அமைப்புகள், பல கல்வி நிறுவனங்களை சேர்ந்த பலர் கலந்து கொள்ளும் ஒற்றுமை பேரணி நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதில் தொண்டர்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும்.
தென்காசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து கனிம வளங்கள் வெட்டி எடுக்கப்பட்டு கேரளா மற்றும் வெளி நாடுகளுக்கு கடத்தப்படுவது வாடிக்கையாகி வருகிறது. இயற்கை சூழ்ந்த தென்காசி பகுதியை சர்வதேச சுற்றுலா தலமாக மாற்றப்பட வேண்டுமானால் கனிம வள கொள்ளைகள் தடுத்து நிறுத்தப்பட வேண்டும். இதற்காக விரைவில் போராட்டங்கள் நடத்தப்பட வேண்டும்.
திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பு பல வாக்குறுதிகள் கொடுத்தது. முன்பு ஆட்சியில் இருந்தவர்கள் வெள்ளப்பெருக்கை சந்தித்த போது திமுகவினர் அந்த ஆட்சியை விமர்சித்தனர். ஆனால், தற்போது தான் மழை துவங்கியுள்ளது. அதிலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர். எங்கு பார்த்தாலும் வெள்ளக்காடாக உள்ளது. ஆட்சிக்கு வந்து 18 மாதம் ஆன பின்னரும் சீர் செய்யாமல் எதிர்கட்சி மேல் பழி போடுவது எந்த வகையில் நியாயமாகும் என்று கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய கிருஷ்ணசாமி, "ஆளுநர் அவர் கருத்துக்களை பகிர்கிறார் அதற்கு ஆளுநரே திரும்பி போ என்பதை எப்படி பார்ப்பது? இதற்கு முன், மாநில அரசு சொல்லி எந்த ஆளுநரும் திரும்பப் பெற்ற வரலாறு உண்டா? மத்திய, மாநில அரசுகள் மக்களின் மேன்மைக்கானது, இரண்டும் இந்தியாவின் சட்டதிட்டப்படியே அமைக்கப்பட்டுள்ளது. எனவே பிரித்து பார்க்கும் போக்கு திமுக, தோழமை கட்சிகளுக்கு வியாதி ஏற்பட்டுள்ளது. அந்த போக்கை மாற்ற வேண்டும். ஆளுநர் என்ன தவறு செய்தார் என்பதை சுட்டிக்காட்டாமல் அவரை திரும்ப பெற வேண்டும் என்பதை யாரும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
பால் பதப்படுத்தப்படுவது என்பது மேலை நாடுகளுக்கு பொருந்தும், அங்குள்ள தட்பவெட்ப நிலைக்கு பொருந்தும், இந்த விஷ பரிசோதனை செய்வதை விட ஆவினை தரமாக மாற்ற முயற்சி செய்ய வேண்டும். தண்ணீரை அளவோடு கலக்க வேண்டும், 100-க்கு 100 கலப்படம் இல்லாமல் கொடுக்க வேண்டும். அதன் பிறகு மூன்று மாதம் பதப்படுத்தப்படுவது தேவை தானா? என்று நீங்கள் முடிவு செய்யலாம்" இவ்வாறு கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
இதையும் படிங்க: பொதுச்செயலாளர் பதவியிலிருந்து நீக்கியதை எதிர்த்து வழக்கு; நீதிமன்றம் நிராகரித்தது தவறு: சசிகலா தரப்பு வாதம்