தென்காசி மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத் துறை சார்பில் தேசிய சிறார் நல திட்டத்தின் கீழ் 18 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு இலவச சிறப்பு மருத்துவ முகாம் தென்காசி ரயில் நிலையம் அருகே உள்ள தனியார் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
இம்முகாமில் தென்காசி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு இருதய நோய், அன்னம் மற்றும் வாய் எலும்பு குறைபாடுகள், நரம்பு சார்ந்த பிரச்னைகளுக்கு இலவச பரிசோதனை மேற்கொண்டனர்.
இதனை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, "தமிழ்நாடு அரசின் விரிவான மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் தென்காசி மாவட்டத்தில் உள்ள குழந்தைகளுக்கு இலவச மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு அதில் குறைபாடுகள் கண்டறியப்பட்ட குழந்தைகளுக்கு இலவசமாக அறுவை சிகிச்சைகளும் மேற்கொள்ளப்பட உள்ளது.
மேலும், தென்காசியில் நோய்த்தொற்று குறைந்து வரும் நிலையில் தீபாவளி பண்டிகை காலத்தில் உணவு பொருட்கள் மூலம் தொற்று அதிகரிக்காமல் இருக்க இனிப்பு கடைகளில் விற்பனை செய்யப்படும் தின்பண்டங்களின் தரம், உணவு கட்டுப்பாட்டுத் துறையின் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இதே போன்று நகர் பகுதிகளில் உள்ள துணி கடைகளில் கோட்டாட்சியர் தலைமையில் கரோனா கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் துணிக் கடைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு வாரம் ஒருமுறை கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது" எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: இந்தியாவில் அதிகரிக்கும் கரோனா