தென்காசி: கொல்லம் -தென்காசி சாலையில் சிவகிரி சோதனைச்சாவடி அமைந்துள்ளது. அந்த வழியாக செல்லும் வாகனங்கள் சோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று தென்காசி மாவட்டம் சிவகிரி வழியாக கேரளாவுக்கு கஞ்சா கடத்தப்படுவதாக தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து புளியங்குடி துணை கண்காணிப்பாளர் அசோக் தலைமையின் கீழ் தனிப்படை அமைத்து தீவிரமாக கஞ்சா கடத்தல் கும்பலை தேடி வந்தனர்.
தொடர்ந்து இன்று அதிகாலையில் தென்காசி காவல் துறையினர் அலுவலகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் சிவகிரி போலீசார் சோதனைச்சாவடி வழியாக செல்லும் வாகனங்கள் அனைத்தையும் தீவிரமாக சோதனை செய்தனர். அப்போது கேரளாவுக்கு காய்கறிகள் கொண்டு சென்ற மினி லாரியில் சோதனை மேற்கொண்டனர். அதில் காய்கறி மூடைகளுக்கு இடையே பொட்டலம் பொட்டலமாக கஞ்சா இருப்பது தெரியவந்தது. உடனே காவல் துறையினர் லாரியில் வந்தவர்களை பிடித்து தீவிர விசாரணை செய்தனர்.
விசாரணையில் அவர்கள் கேரளா மாநிலம் எர்ணாகுளம் பகுதியைச் சேர்ந்த ஷியாஸ் (27), புளியங்குடி கற்பக வீதியைச் சேர்ந்த முருகானந்தம் (29) என்பதும் தெரியவந்தது. அவர்களிடமிருந்து 105 கிலோ கஞ்சாவையும், மினி லாரியையும் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.
இந்த கஞ்சா தமிழ்நாட்டில் இருந்து கேரளாவுக்கு கடத்த முயன்றதாலும், தென்காசி மாவட்டத்தில் இதுவரை இல்லாத அளவு 105 கிலோ கஞ்சா பறிமுதல் செய்திருப்பதால் மாவட்ட எஸ்பி சாம்சன் சிவகிரி காவல் நிலையத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டார். குற்றவாளிகளை திறன்பட செயல்பட்டு கைது செய்த சிவகிரி காவல் துறையினருக்கு தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சாம்சன் பாராட்டுகளைத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: சென்னை நபரிடம் நூதன முறையில் ரூ.1.91 லட்சம் மோசடி செய்த பலே இளைஞர்கள்.. நீங்கள் உஷார்!