தென்காசி : சிவகிரி அருகே உள்ளது டி.இராமநாதபுரம் கிராமம். இங்கு சுமார் 2000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் தங்களது வாழ்வாதாரத்திற்காக விவசாயம் செய்வது, கூலி வேலை போன்ற பணிகளை செய்து வருகின்றனர். இந்த கிராமத்தில் இருக்கும் பள்ளிக்கூடத்திற்கு பின்பகுதியில் குப்பைகள் மலை போல குவிந்து இருந்துள்ளதாக புகார்கள் எழுந்த வண்ணம் இருந்துள்ளது
குவித்து வைக்கப்பட்டிருக்கும் குப்பைகளால் அந்த பகுதி மக்கள் மற்றும் பள்ளி குழந்தைகள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். அந்த குப்பை மேட்டில் இருந்து, விஷப்பூச்சிகள் வீட்டிற்குள் வருவதால் உடனடியாக சுத்தம் செய்ய வேண்டுமென சுமார் ஆறு மாத காலமாக இந்தப் பகுதியில் உள்ள பொதுமக்கள் போராடி வருகின்றனர்.
மேலும், தேர்தல் சமயங்களில் அரசியல்வாதிகள் நாங்கள் இதை செய்கிறோம் அதை செய்கிறோம் என்று பல்வேறு விதமான வாக்குறுதிகளை கொடுத்துவிட்டு செல்கின்றனர். தேர்தல் முடிந்த பின் இந்த பகுதியை எட்டி கூட பார்ப்பது இல்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
மேலும், நாங்கள் வென்று விட்டால் உங்களுக்கு குடிநீர் பிரச்சனை, வடிகால் பிரச்சினை போன்ற அனைத்து பிரச்சனைகளையும் தீர்த்து வைப்போம் என வாக்குறுதிகளை அள்ளி வீசுகின்றனர் எனக் கூறுகின்றனர். பள்ளி அருகில் இருக்கும் குப்பைகளை அகற்றக் கோரி பஞ்சாயத்து நிர்வாகம் அலைக்கழித்து வருவதாகவும் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
இதையும் படிங்க: கலவரத்தை தூண்டும் வகையில் பேசுவதாக சபாநாயகர் அப்பாவு மீது போலீசில் புகார்!
மேலும் அப்பகுதி மக்கள் இதற்காக பலமுறை பஞ்சாயத்து நிர்வாகத்திடமும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் கோரிக்கை மனுவாக கொடுத்தும் தற்பொழுது வரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல் இருந்து வருகிறது. பள்ளி அருகிலேயே குப்பை குவிந்து கிடப்பதால் குழந்தைகளின் ஆரோக்கியம் மற்றும் குப்பையைக் கடந்து செல்லும் குழந்தைகள், குப்பையால் மூடிக்கிடக்கும் கால்வாயில் விழக்கூடிய நிலை உள்ளது.
சுத்தமாக இருக்க வேண்டிய பள்ளியின் சுற்றுப்புறமே இவ்வளவு அசுத்தமாக இயங்கி வருகிறது. குப்பையை அகற்றி குழந்தைகளுக்கு சுகாதாரமான சூழலை உறுதிப்படுத்த அதிகாரிகள் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இந்நிலையில் ஈடிவி பாரத் செய்தியின் எதிரொலியாக உடனடியாக குப்பையே அகற்ற மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
மொத்தம் அடிப்படையில் பஞ்சாயத்து நிர்வாகம் உடனடியாக குப்பை அள்ளி அந்த இடத்தை சுத்தம் செய்துவிட்டு இந்த இடத்தில் யாரும் குப்பையை கொட்ட கூடாது என போஸ்டர் ஒட்டிச்சென்றுள்ளனர். இந்த உடனடி மாற்றத்திற்கு ஈடிவி பாரத் செய்தி முக்கிய பங்கு வகுக்கிறது என அப்பகுதி மக்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இதையும் படிங்க: என்எல்சியால் பாதிக்கப்பட்டவர்கள் அணுகினால் சட்டப்படி இழப்பீடு? - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு!