தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்திலுள்ள சிவலார்குளம் கிராமப்பகுதிகளில் நான்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
அப்பகுதியிலுள்ள வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு கேட்டு மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளனிடம் பாரதிய ஜனதா கட்சி சார்பில் 50க்கும் மேற்பட்டோர் மனு அளித்தனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், "எங்கள் பகுதிக்கு தாமிரபரணி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்தக் குடிநீரானது 1999ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் 21 ஆண்டுகளாக எங்கள் பகுதியில் உள்ள வீடுகளுக்கு ஆற்று குடிநீர் இணைப்பு வழங்கப்படவில்லை. எனவே எங்கள் பகுதிக்கு மத்திய அரசின் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் இலவசமாக வீட்டுக் குடிநீர் இணைப்பு வழங்கக் கோரி 800க்கும் மேற்பட்டோர் ஆட்சியரிடம் மனு அளித்தோம்" எனத் தெரிவித்தனர்.