தென்காசி: கடையநல்லூர் அருகே புளியங்குடி திருஞானசம்பந்தர் பள்ளியில் தனியார் அறக்கட்டளை மற்றும் ‘வாய்ஸ் ஆப் தென்காசி’ பவுண்டேஷன் மற்றும் சங்கரா கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் மருத்துவ முகாம் நடைபெற்றது. இந்த இலவச கண் மருத்துவ முகாமில் சிறப்பு விருந்தினராக பாஜகவின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில துணைத்தலைவர் ஆனந்தன் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.
மேலும் இதில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு கண் பரிசோதனை செய்து கொண்டனர். மேலும் சத்தான உணவு சாப்பிட வேண்டும் எனவும் கீரை வகைகள் காய்கறி வகைகள் உள்ளிட்டவைகள் அதிகமாக சேர்த்துக் கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் பொது மக்களுக்கு அறிவுரைகள் வழங்கினார். இதனைத் தொடர்ந்து குழந்தைகள் செல்போன் கட்டாயம் பயன்படுத்தக் கூடாது என்பதில் பெற்றோர்கள் கண்டிப்பாக இருக்கவேண்டும் எனவும் மருத்துவர்கள் பெற்றோர்களுக்கு அறிவுரையும் வழங்கினர்.
இதனைத் தொடர்ந்து பாரதிய ஜனதா கட்சியின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில துணைத்தலைவர் ஆனந்தன் பேசுகையில், “தமிழகத்தில் மூன்று கோடி குடும்ப அட்டை உள்ள நிலையில் 70 லட்சம் பேருக்கு மட்டுமே உரிமைத்தொகை கிடைக்க வாய்ப்புள்ளது. தேர்தல் வாக்குறுதியில் சொன்னது ஒன்று நடப்பது ஒன்று என திமுக இரட்டை வேடம் போடுவதாக அவர் குற்றம் சாட்டினார்.
மேலும் மதுவை ஒழிப்போம் என்று கூறி ஏராளமான மது கடைகளை திறந்து தான் திமுகவின் சாதனைகள் உள்ளது. அரசு ஊழியர்கள் தொடர்ந்து வஞ்சிக்கப்படுகின்றனர். நகைக்கடன் தள்ளுபடி எனக்கூறி 5 சவரனுக்கு கீழே உள்ளவர்களுக்கு நகைக்கடன் தள்ளுபடி செய்யாமல் காலம் தாழ்த்தி வருவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
மேலும் 3 லட்சம் இளைஞர்களுக்கு நேரடியாகவும் 2 லட்சம் இளைஞர்களுக்கு மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு வழங்கப்படும் எனக் கூறி இன்னும் அதை செயல்படுத்தாமல் இருந்து வருவதாக தமிழக அரசை குற்றம் சாட்டினார். மூன்று மருத்துவக் கல்லூரிகளில் புதிய மாணவர் சேர்க்கையை நடத்த முடியாத சூழ்நிலையை ஆளும் தி.மு.க அரசு உருவாக்கி இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
மேலும் மின்சாரத் துறையிலும், போக்குவரத்து துறைகளும் ஊழல் நடைபெற்று இருப்பதாக அவர் பேசினார். பள்ளிக்கல்வித்துறை தரம் தாழ்ந்து உள்ளதாகவும் தமிழகத்தில் கொலை, கொள்ளை, சாதி வன்மம் உள்ளிட்டவைகள் அரங்கேறுகிறது” என அவர் குற்றம் சாட்டினார். மேலும் கூட்டம் முடிவில் அனைவருக்கும் 77 வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு கண் சிகிச்சை முகாமில் கலந்து கொண்ட அனைவருக்கும் தேசியக்கொடி வழங்கப்பட்டது.