தென்காசி: ஓணம் பண்டிகையை முன்னிட்டு தமிழக- கேரள எல்லைப் பகுதியில் இரு மாநில போலீசார் ஒன்றிணைந்து மோப்பநாய் உதவியுடன் தீவிரமாக வாகனச் சோதனையை செய்து வருகின்றனர்.
கேரளாவில் முக்கிய திருவிழாவான ஓணம் பண்டிகையானது, ஆகஸ்ட் 29ம் தேதி கேரளாவில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. இந்த பண்டிகையையொட்டி கேரளாவில் பொதுமக்கள் தங்களது வீடுகளில் அத்தப்பூ கோலமிட்டும், காய்கறி, பழங்கள் படைத்தும் வழிபாடு செய்வார்கள். மேலும் உறவினர்கள், நண்பர்களுக்கு உணவு வழங்கி கொண்டாடுவார்கள். அனைத்து மதத்தினரும் ஒருங்கிணைந்து கொண்டாடப்படும் இவ்விழா வெகுவிமரிசையாக இருக்கும்.
மேலும், தமிழக- கேரள எல்லைப் பகுதிகளில் உள்ள தமிழக பகுதிகளிலும், ஓணம் பண்டிகையானது வெகு சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இதையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பூக்கள், காய்கறிகள், பழங்கள் மற்றும் உணவுப்பொருட்கள் கேரள மாநிலத்திற்கு கொண்டு செல்லப்படுகிறது. அவ்வாறு கொண்டு செல்லும் வாகனங்களில் ரேசன் அரிசி, கஞ்சா, மதுபானம் கடத்தப்படவும் வாய்ப்புள்ளது.
இதையும் படிங்க: பழனியில் தங்கத்தேர் இழுத்து சாமி தரிசனம் செய்த ஆளுநர் ரவி
இந்நிலையில், பண்டிகை காலங்களில் சட்டம், ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படாத வகையிலும், அசம்பாவிதங்கள் நிகழாத வகையிலும், மது உள்ளிட்ட போதை பொருட்கள் கடத்திச்செல்வதை தடுக்கவும் காவல்துறை சார்பில் பல்வேறு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
அதனைதொடர்ந்து, தமிழக போலீசாரும், கேரள மதுவிலக்கு போலீசாரும், ஒன்றிணைந்து தமிழக-கேரள எல்லை பகுதியான ஆரியங்காவு பகுதியில் மோப்பநாய் உதவியுடன் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு செல்லும் அனைத்து வாகனங்களும், கேரளாவில் இருந்து தமிழகத்திற்குள் நுழையும் அனைத்து வாகனங்களும், முறையான சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகே இரு மாநிலங்களுக்கும் அனுமதித்து வருகின்றனர்.
மேலும், இரண்டு மாநில காவல்துறையினர் ஒன்றிணைந்து நடத்தும் இந்த சோதனையானது, வருகின்ற 29ஆம் தேதி வரை தமிழக-கேரளா எல்லைப் பகுதியான, ஆரியங்காவுப் பகுதியில் நடத்தப்படும் எனவும் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இது போன்ற சோதனைகளை இரு மாநில காவல்துறையும், இணைந்து மேற்கொண்டு வருவதாகவும் இரு மாநில காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: "வறட்சியால் கருகிய பனை மரங்களை மீட்க நடவடிக்கை" - எம்பி கனிமொழி உறுதி!