தென்காசி: குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளி மண்டல சுழற்சி நிலவும் காரணமாகத் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்களில் அதி கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு அரசு சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
மேலும் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களுக்கும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டு உள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று (டிச.18) தென்காசி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், சங்கரன்கோவிலில் இரவு முழுவதும் பெய்த மழையின் காரணமாக சங்கரன்கோவில் - புளியங்குடி செல்லும் சாலையில் உள்ள கோவிந்த பேரி தெப்பக்குளத்தின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்தது. இதை அடுத்து, சுற்றுசுவர் இடிந்து விழுந்ததால் வாகன ஓட்டிகளின் பாதுகாப்பு கருதி, காவல் துறையினர் இடிபாடு நடந்த இடத்தைச் சுற்றிப் பேரிக்காடுகள் அமைத்துள்ளனர்.
மேலும், புளியங்குடி அருகே உள்ள சிந்தாமணி அக்ரஹாரம் பகுதியில், புளியங்குடி பால சுப்பிரமணியசாமி கோயிலில் பணி ஓய்வு பெற்றக் கண்ணன் சிவாச்சாரியார் வீடும் இடிந்து விழுந்துள்ளது. மேலும், சேந்தமரம் செல்லும் சாலையில் நீர் சாலை முழுவதும் தேங்கி நிற்பதால், வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமம் அடைந்துள்ளனர்.
இந்திரா நகர் பகுதியில் வீடுகளுக்குள் மழை நீர் சூழ்ந்து முழங்கால் அளவிற்கு தண்ணீர் தேங்கி நிற்பதால், பாம்பு, தேள் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் நீரில் வருவதாகக் கூறி பொதுமக்கள் அச்சமடைந்து உள்ளனர். மேலும் சேர்ந்தமரம் சாலையில் உள்ள ஓடையில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால், சாலைகள் மற்றும் வீடுகளுக்குள் தண்ணீர் வருவதாகப் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில், சங்கரன்கோவில் நகராட்சி நிர்வாகம் ஜேசிபி இயந்திரம் மூலம் உடைப்பைச் சரி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: தென்காசியில் கொட்டும் கனமழை... பேரிடர் மீட்புப் படை விரைவு - அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் தகவல்