தென்காசி மாவட்டம் வீரகேரளம்புதூர் ஊத்துமலை கிராம பஞ்சாயத்தின் மூலமாக தேசிய மகாத்மா வேலைத்திட்டத்தின் கீழ் அரசு நலத்திட்ட உதவிகளான மழைநீர் சேகரிப்பு, தனிநபர் கழிப்பிடம் போன்ற வகைகளில் ஏராளமான ஏழை எளிய மக்கள் வேலை செய்துவருகின்றனர்.
இதில், ஊத்துமலை கிராமத்தில் ஊரக திட்டத்தின் மேற்பார்வையாளர்கள் தங்களுக்குச் சாதகமானவர்களுக்கும், உறவினர்களுக்கும் மட்டும் பணிகளை வழங்குவதாகவும்,
மற்றவர்களுக்கு மாதத்தில் ஓரிரு நாள்கள் மட்டுமே வேலை வழங்குவதாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது.
மேலும், இது குறித்து கேட்டால் தகாத சொற்களால் திட்டி விரட்டிவிடுவதாகவும் தெரிகிறது. இதனைக் கண்டித்து அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்து அவர்கள் கூறுகையில், "ஊத்துமலை கிராம பஞ்சாயத்தில் ஐந்தாவது வார்டு பகுதியில் வசித்துவரும் நாங்கள் தேசிய மகாத்மா வேலைத்திட்டத்தின்கீழ் பணி செய்துவருகின்றோம். எங்கள் குடும்பத்தினர் இந்த வேலையை மட்டும் நம்பியுள்ளனர். மாதத்திற்கு இருமுறை மட்டுமே பணி வழங்கப்பட்டுவருகிறது.
மேற்கொண்டு பணிகளை வழங்குவதற்கு இடைத்தரகர்கள் செயல்பட்டுவருகின்றனர். சுழற்சி முறையில் வேலை வழங்கக்கோரி கேட்டால் தகாத வார்த்தையில் திட்டி அனுப்புகின்றனர். மேலும் வேலை வழங்க லஞ்சம் அளிக்க வேண்டும் என்று ஆணவத்துடன் கூறுகின்றனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேற்பார்வையாளரைப் பணியிட மாற்றம் செய்ய வேண்டும் எனக் கூறி ஊராட்சி ஒன்றிய ஆணையரிடம் மனு அளித்துள்ளோம்" என்று தெரிவித்தனர்.