தென்காசி: சங்கரன்கோவிலில் சங்கரநாராயண சுவாமி திருக்கோயிலில் சங்கரலிங்கம் கோமதி அம்பாள் சங்கரநாராயண ஆகிய மூன்று சன்னதிகள் உள்ளன. இங்கு ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வந்துச் செல்கின்றனர். இது ஒரு பரிகாரத் தலமாகவும், சிவ வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாகவும் விளங்கக்கூடிய கோயிலாகும்.
அதனால் இந்த சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோயிலில் பெரும்பாலான மணமக்களுக்குத் திருமணம் நடைபெறும் முக்கிய ஸ்தலமாகவும் விளங்குகிறது. இந்நிலையில் நேற்று கோயில் வாசல் சுவாமி சன்னதி வீதியில் முன்பு நாட்டு வெடிகுண்டைப் போன்று உள்ள ஒரு மர்மப் பொருள் ஒன்று கிடந்துள்ளது. இதனைப் பார்த்த அப்பகுதியில் உள்ள மக்கள் அச்சமடைந்து உடனடியாக காவல்துறையினருக்குத் தகவல் கொடுத்தனர்.
பின்னர் கிடைத்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் கோயில் முன்பு உள்ள சன்னதி தெருவிற்கு வந்தனர். பின்னர் அந்த வெடிகுண்டு போன்ற மர்ம பொருளைத் தண்ணீர் நிரம்பிய பிளாஸ்டிக் வாலி ஒன்றில் போட்டு அதனைச் செயலிழக்கச் செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர். பின்பு பட்டாசு தொழிற்சாலை தொழில்நுட்பம் நிபுணர்களை அழைத்தனர். அங்கு வந்த நிபுணர்களிடம் அந்த மர்ம பொருளைக் காண்பித்து என்ன விதமான வெடிகுண்டு என்று விளக்கம் கேட்டனர்.
அப்போது இது பேன்சி ரக பட்டாசுகளுக்குப் பயன்படுத்தப்படும் உதிரிப் பாகம் என உறுதிப் படுத்தப்பட்டது. மேலும் நேற்று சுபமுகூர்த்த தினம் என்பதால் கோயிலில் நடைபெறும் திருமண நிகழ்ச்சிக்காக ஒவ்வொரு மணமக்களும் ஒவ்வொரு குழுக்களாக ஒன்றிணைந்து கோயிலுக்கு வந்து சென்றனர். அப்போது பட்டாசுகள் வெடிக்கப்பட்டதில் பைப் பேன்சி ரக பட்டாசு ஒன்றின் பாகம் பார்ப்பதற்கு நாட்டு வெடிகுண்டு போலவே இருந்ததால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஏற்கனவே கடந்த 14 ஆண்டுகளுக்கு முன்பு சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கும்பாபிஷேகம் நடைபெற்று முடிந்த நிலையில், இந்த ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெறுவதற்கு உண்டான வேலைகள் தொடங்கியுள்ளது. இதனையடுத்து கோபுர வேலைகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் அப்பகுதியில் பீதியைக் கிளப்பும் விதமாக பேன்சி ரக பட்டாசின் உதிரி பாகம் ஒன்று நாட்டு வெடிகுண்டைப் போலவே கிடந்திருப்பது அப்பகுதி பக்தர்கள் மற்றும் பொதுமக்களைப் பயத்தில் ஆழ்த்தியது.
மேலும் சிறிது நேரத்தில் அவை பட்டாசின் உதிரிப் பாகம் என்று தெரிந்த பின்பு தான், அங்குள்ள மக்களும் காவல்துறையினரும் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இதனை அடுத்து காவல்துறை துணை கண்காணிப்பாளர் சுதீர் தலைமையில் வந்திருந்த போலீசார் பக்கெட் தண்ணீருக்குள் போடப்பட்டிருந்த அந்த மர்மப் பொருளை பக்கெட்டோடு கண்காணிப்பு அலுவலகத்திற்கு எடுத்துச் சென்றனர். அதனை ஆய்வு செய்த பின்பு அது குறித்த முழுமையான தகவல்கள் வெளிவர வாய்ப்புள்ளது என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: ரவுடி சஞ்சய் ராஜா மீது துப்பாக்கிச்சூடு: விசாரணை நடத்தக்கோரி நீதிமன்றத்தில் மனு!