தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டப்பேரவை தொகுதி திமுக உறுப்பினர் பூங்கோதை ஆலடி அருணா, உடல்நலக்குறைவால் திருநெல்வேலியில் உள்ள தனியார் மருத்துவமனையில் இன்று (நவம்பர் 19) அனுமதிக்கப்பட்டுள்ளார். இதற்கிடையில், பூங்கோதை ஆலடி அருணா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
இது குறித்து தகவலறிய திமுக நிர்வாகிகள் சென்றபோது, பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன. அதாவது, தென்காசி மாவட்டம் கடையம் பகுதியில் திமுக பாக முகவர்கள் கூட்டம் நேற்று (நவம்பர் 18) நடைபெற்றது. அதில், சிறப்பு அழைப்பாளராக சட்டப்பேரவை உறுப்பினர் பூங்கோதை ஆலடி அருணா பங்கேற்றார். அப்போது, திமுக கீழ்மட்ட நிர்வாகிகள் சிலர் பூங்கோதையை அவதூறாக பேசி ரகளையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
கூட்டத்தில் பூங்கோதை பேச முயன்றபோது, திமுக நிர்வாகிகள் மைக்கை பிடுங்கி ரகளையில் ஈடுபட்டதால், மனமுடைந்த அவர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். இந்த ரகளையின் பின்னணியில் உட்கட்சிப் பூசல் இருப்பது தெரியவந்துள்ளது. அதாவது தென்காசி மாவட்டத்தில் தெற்கு மாவட்ட திமுக செயலாளராக இருப்பவர் வழக்கறிஞர் சிவ.பத்மநாபன். இவர் ஆரம்பத்தில் திமுக ஒன்றிய செயலாளராக இருந்து மாவட்ட செயலாளராக கட்சியில் வளர்ந்தவர். இவருக்கும் பூங்கோதைக்கும் கட்சி ரீதியாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது.
ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்டமாக இருந்தபோது கட்சி நிர்வாகிகளுடன் பூங்கோதை இணக்கமாக பணியாற்றினார். ஆனால், தனி மாவட்டமாக உருவாக்கப்பட்ட பிறகு பூங்கோதையை சிவ.பத்மநாபன் ஓரம்கட்டியதாகக் கூறப்படுகிறது. இந்த சூழலில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில், திமுக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர் பத்மநாபன் தூண்டுதலின்பேரில் அவதூறான வார்த்தைகளால் பூங்கோதையை திட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த பூங்கோதை, கூட்டத்தை பாதியில் முடித்துக் கொண்டு சென்றார்.
அதன் பிறகு, தூக்க மாத்திரை எடுத்துக் கொண்டு மயங்கிய நிலையில் இருந்த பூங்கோதையை மீட்ட குடும்பத்தினர், திருநெல்வேலி மாவட்டம் ஜங்ஷனில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். தற்போது, அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளார். சட்டப்பேரவை உறுப்பினர் பூங்கோதை ஆலடி அருணா தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.