திரவியநகர் அருகிலுள்ள புல்லுக்கட்டுவலசை சேர்ந்த வேலாயுதம் மகன் திருமலை. இவர் கடையம் தென்காசி சாலையில் பர்னிச்சர் கடை நடத்திவருகிறார்.
இவருக்குச் சொந்தமான மாருதி ஆம்னி வேனை கடைக்குப் பின்புறம் நிறுத்திச் சென்றிருந்தார். இந்நிலையில் இன்று (மார்ச் 6) அதிகாலை மாருதி ஆம்னி வேன் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
இது குறித்து உடனடியாக தென்காசி தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் அளித்ததையடுத்து தீயணைப்புத் துறை மாவட்ட அலுவலர் கவிதா உத்தரவின்பேரில், மாவட்ட உதவி அலுவலர் வெட்டும் பெருமாள் தலைமையில் நிலைய அலுவலர் ரமேஷ், நிலைய அலுவலர் (போக்குவரத்து) சுந்தரராஜன், கணேசன், ஜெகதீஷ்குமார், விஸ்வநாதன், வேல்முருகன், ராமசாமி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்துவந்து தீயை அணைத்தனர்.
மாருதி வேன் நிறுத்தியிருந்த இடத்தில் கல்லூரி, பள்ளி மாணவர்களை அழைத்துச் செல்லும் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருக்கும். இன்று (மார்ச் 6) காலையில் கல்லூரி, பள்ளி வாகனங்கள் வெளியே சென்றுவிட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
மேலும் வேன் தீப்பிடித்து எரிந்தது குறித்து தீயணைப்பு, காவல் துறையினர் விசாரித்துவருகின்றனர்.