தென்காசி: குற்றாலத்தில் முதன் முறையாக சிற்றாற்றில் நடைபெற்ற மகா ஆரத்தி பெருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தென்காசி மாவட்டம் திரிகூடமலை அடிவாரத்தில் அமைந்துள்ள குற்றாலத்தில் அகில பாரதிய சன்னியாசிகள் சங்கம் மற்றும் கடையநல்லூர் ஸ்ரீ முண்டகக்கண்ணி அம்மன் அறக்கட்டளை சார்பில் இந்த விழா நடைபெற்றது.
பழைய குற்றாலம் செல்லும் சாலையில் உள்ள தனியார் விடுதி வளாகத்தில் மகா ஆரத்தி பெரு விழா கடந்த 21-ஆம் தேதி துவங்கியது. முதல் நாள் திருக்குற்றாலம் சித்ரா நதிக்கரையில் மகா ஆரத்தி பெருவிழா நடைபெற்றது. இரண்டாவது நாளான நேற்று முன்தினம் மாலையில் புலியருவி கரையில் ஆரத்தி பெருவிழா நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மூன்றாவது நாளான நேற்று (ஜூலை 23) மாலையில் நடைபெற்ற ஆரத்தி விழாவை முன்னிட்டு காலையில் சுதர்சன ஹோமம், கோ பூஜை, நடத்தப்பட்டது.
மேலும் பவானி சுதர்சனமடம் ஸ்ரீராமானுஜ ஜீயர் சுவாமிகள், திருநெல்வேலி ஸ்ரீ நீல புத்தாத் மானந்தா சரஸ்வதி சுவாமி, சன்னியாசிகள் சங்க செயலாளர் நித்தியானந்தா சரஸ்வதி ஆகியோர் கருத்தரங்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சொற்பொழிவாற்றினார்கள். தொடர்ந்து தென்காசி நகரப் பகுதியில் தவழ்ந்து வரும் சிற்றாற்று கரையான யானை பாலத்தில் மகா ஆரத்தி பெருவிழா நடைபெற்றது.
முன்னதாக சிற்றாறுக்கு மஞ்சள், மாவு பொடி, திரவியம், சந்தனம், குங்குமம், பால், இளநீர், தேன் உள்ளிட்ட பொருள்களால் சன்னியாசிகள் அபிஷேகம் செய்து வழிபாடு செய்தனர். பின்னர் மகா ஆரத்தி பெரு விழா நடைபெற்றது. தென்காசி மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்தும் ஆரத்தி திருவிழாவை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் இந்த ஆரத்தி பெருவிழாவில் குற்றாலத்திற்கு வருகை புரிந்த சுற்றுலாப் பயணிகள் உட்பட ஏராளமான கிராம மக்கள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு நிகழ்ச்சியினை சிறப்பித்தனர்.
மேலும் விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும், பாரதிய ஜனதா கட்சியின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவு ஆனந்தன் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது. நதிகளை தூய்மையாக்க வேண்டும், இயற்கை வளங்களை பேணிக்காக்க வேண்டும், மழை பொழிந்து விவசாயம் செழிக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இந்த ஆரத்தி பெருவிழா நடத்தப்பட்டு வருவதாக சன்னியாசிகள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: குற்றாலத்தில் சுற்றுலாப் பயணிகளுக்கு உயிர்கொல்லியாக மாறிப்போன உணவுகள் - அதிரடியாக நடந்த ரெய்டு!