தென்காசி மாவட்டம் நகர்ப்பகுதியின் முக்கியச் சாலையான தங்கப்பாண்டியன் சிக்னல் அருகே ஜெயபால் (63) என்பவருக்குச் சொந்தமான வீடு உள்ளது. இவரது மனைவி விஜயலட்சுமி. இவர்களுக்கு திருமணமான இரண்டு மகள்களும் ஒரு மகனும் சென்னையில் வசித்துவருகின்றனர்.
தென்காசியில் மரக்கடை தொழில் செய்துவரும் ஜெயபால் நேற்று (செப்டம்பர் 7) தொழில் நிமித்தமாக வெளியூர் சென்றுள்ளார். இதனால் விஜயலட்சுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.
இந்நிலையில், மதிய நேரத்தில் அடையாளம் தெரியாத நபர்கள் வீட்டில் நுழைந்து விஜயலட்சுமியை மிரட்டியதோடு அவரைக் கட்டிப்போட்டு வீட்டிலிருந்து 80 பவுன் நகை, லட்சக்கணக்கான பணத்தை கொள்ளையடித்து தப்பிச் சென்றனர்.
இதன்பின் ஜெயபால் வீட்டில் வேலை செய்யக்கூடிய பணிப்பெண் வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது விஜயலட்சுமி கட்டிப் போடப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து மாவட்ட காவல் துணை கண்காணிப்பாளர் கோகுல கிருஷ்ணன் தலைமையில், மோப்ப நாய்கள், தடவியல் துறை உதவியுடன் காவல் துறையினர் விசாரணையில் ஈடுபட்டுனர்.
முதற்கட்ட தகவலில் இரண்டு நபர்கள் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. இது குறித்து தென்காசி நகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டுவருகின்றனர்.
பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் மிகுந்த பிரதான சாலையில் நடைபெற்ற திருட்டுச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.