தென்காசி: கரோனா நோய்த்தொற்று காரணமாக சுற்றுலாத் தலங்களில் உள்ள அருவிகளில் குளிக்க கடந்த பல மாதங்களாகத் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் தென்காசி மாவட்டம் குற்றாலம் அருவிகளில் பொதுமக்கள் குளிக்க கடந்த ஆண்டு மார்ச் முதல் டிசம்பர் மாதம் வரை தடைவிதிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், கரோனா தொற்று குறைந்த நிலையில் அருவிகளில் குளிக்க மக்களுக்கு அனுமதியளிக்கப்பட்டது. பின்னர், கடந்த மார்ச் மாதம் தொற்று அதிகரித்ததால் மீண்டும் அனுமதி மறுக்கப்பட்டது. கடந்த ஆறு மாதங்களாக இந்தத் தடை நீடிக்கிறது.
பொய்யான தகவல் பரவல்
குறிப்பாக கடந்த ஜூன், ஜூலை, ஆகஸ்ட் ஆகிய மூன்று மாதங்கள் குற்றாலத்தில் சாரல் சீசன் களைகட்டும். அந்த நேரத்தில் ஆர்ப்பரித்துக் கொட்டும் அருவிகளில் குளிக்க வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்கள், வெளிநாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கானோர் வந்துசெல்வார்கள்.
இதனை நம்பி அருவியைச் சுற்றி பலர் கடை நடத்திவருகின்றனர். ஆனால் இந்த ஆண்டும் குற்றால சீசனில் அருவிகளில் குளிக்க அனுமதி அளிக்காததால் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்ததோடு வியாபாரிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், நாளை (அக். 1) முதல் குற்றால அருவிகளில் குளிக்க அனுமதி அளிப்பதாக சுற்றுலாத் துறை அமைச்சர் மதிவேந்தன் கூறியதாகத் தகவல் பரவியது.
மாவட்ட நிர்வாகம் விளக்கம்
இதனால், பொதுமக்கள், வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்தச் சூழ்நிலையில், குளிக்க அனுமதிப்பதாக வெளியான தகவல் உண்மை இல்லை எனவும், அனுமதி அளிப்பதாக இருந்தால் முறைப்படி அறிவிப்பு வரும் எனவும் தென்காசி மாவட்ட நிர்வாகம் சார்பில் தற்போது விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பூம்புகாரில் இந்திர திருவிழா எப்போது? - அமைச்சர் பதில்