இந்திய நாட்டின் 77வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் இன்று (ஆகஸ்ட். 15) கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக உலகப் பிரசித்தி பெற்ற கடலூர் மாவட்டம் சிதம்பரம் நடராஜர் கோயிலில் தீட்சதர்கள் தேசிய கொடியை பொற்கூரை என்று அழைக்கப்படும் கருவறையில் வைத்து நடராஜர் முன்பு சிறப்பு பூஜைகள் செய்தனர்.
பின்னர் மேளதாளங்கள் முழங்க 142 அடி உயர கிழக்கு வாயில் கோபுரத்தில் தேசியக் கொடி ஏற்றி தீட்சிதர்கள் மரியாதை செய்தனர். அதன் பின் சுதந்திர தின விழாவை கொண்டாடும் வகையில் அனைத்து பொதுமக்களுக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.
தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூரில் உள்ள தனியார் கல்லூரியில் வித்தியாசமான முறையில் பல்வேறு நாடுகளில் கலாச்சாரத்தை போற்றும் வகையிலும், ஒற்றுமையை வலியுறுத்தும் வகையிலும் சுதந்திர தின விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந்தினராக நக்கீரன் கோபால் கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்.
இதனை தொடர்ந்து கல்லூரி மாணவிகள் நாட்டின் பன்முகத் தன்மை கொண்ட கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் விதமாக கலை நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பாக நடனம் ஆடினர். மேலும் 28 மாநிலத்தின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் விதமாக அந்தந்த மாநில கலாச்சார உடைகளில் ஒய்யாரமாக நடந்து வந்து அனைவரையும் கவர்ந்தனர்.
முன்னதாக நடைபெற்ற விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நக்கீரன் கோபால் சிறப்பு பரிசுகளை வழங்கினார். இதனைத் தொடர்ந்து மாணவிகளிடம் அவர் பேசுகையில், மாணவிகள் நாட்டின் பல்வேறு உயரிய பதவிக்கு செல்ல வேண்டும் என்றும், நல்லொழுக்கத்துடன் கூடிய கல்வியை சிறப்பாக கற்க வேண்டும் எனவும் ஆசிரியர்கள் சொல்லும் வார்த்தையை கேட்டு சிறப்பாக படிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
பன்முகத் தன்மை உள்ள தமது நாட்டின் கலாச்சாரத்தை பிரதிபலித்த மாணவிகளுக்கு அவர் நன்றி கூறினார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பாரதிய ஜனதா கட்சியின் வெளிநாடு மற்றும் அண்டை மாநில தமிழ் வளர்ச்சி பிரிவின் துணைத் தலைவர் ஆனந்தன் பேசுகையில், "நாட்டின் 98 சதவீதம் அரசு ஊழியர்கள் ஆண்களாகவும் இரண்டு சதவீதம் மட்டுமே பெண்கள் அரசு பணியில் ஈடுபட்டு வருவதாகவும்" கூறினார். இந்த நிலை மாற வேண்டும் எனவும் ஆண்களுக்கு நிகராக பெண்களும், அரசு பதவி வகிக்க வேண்டும் எனவும் பேசினார்.
இதையும் படிங்க: தமிழகத்தில் 70 லட்சம் பேருக்கே உரிமைத்தொகை வழங்கவுள்ளது கண்டனத்திற்குரியது - பாஜ பிரமுகர் கண்டனம்